Saturday, February 22, 2014

செல்லுமா? செல்லாதா? இந்த 5 ரூபாய் நோட்டு !! 

ஐந்து ரூபாய் நோட்டு செல்லாது என்கிற வதந்தி காரணமாக பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் ஐந்து ரூபாய் நோட்டு இனிமேல் செல்லாது. ஆனால், நாணயங்கள் செல்லும் என்கிற செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது. குறிப்பாக கிராமங்களில் இந்த வதந்தி இறக்கை கட்டி பறக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் கள்ளநோட்டை ஒழிக்கும் வகையில், சமீபத்தில் 2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ள 100, 500 மற்றும் 1000 ரூபாய்களை அருகில் உள்ள வங்கிகளில் மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியது.
இதை தவறாக புரிந்து கொண்ட சிறு கடைக்காரர்களும், பொதுமக்களில் சிலரும் ஐந்து ரூபாய் நோட்டுகளை வாங்கவே அலறுகின்றனர்.
இதுகுறித்து சிறு கடை வியபாரிகள் கூறுகையில், எங்கள் கடைகளில் பொருட்களை வாங்குபவர்களிடம் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு சில்லறை கொடுக்கும் போது ஐந்து ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர்.
ஏன் என்று கேட்டால், இது செல்லாது. எங்களுக்கு ஐந்து ரூபாய் நாணயமாக கொடுங்கள் என்று கூறுகின்றனர். படிக்காதவர்கள் தான் இந்த ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கின்றனர் என்று பார்த்தால் படித்தவர்களும் இதைத் தான் கூறுகின்றனர்.
இதனால் நாங்களும் ஐந்து ரூபாய் நோட்டுக்களை வாங்குவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரிசர்வு வங்கி அதிகாரிகள் கூறுகையில், ரூபாய் நோட்டுகளில் ஆண்டுகள் அச்சடிக்கப்படாத ரூபாய்களை பொது மக்கள் வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம். ரிசர்வு வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லும் என்றும் ஐந்து ரூபாய் நாணயங்களுக்கு எந்த மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்பு ஐந்து ரூபாய் தாளுக்கும் உண்டு. பொது மக்கள் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment