வக்ஃப் நிலத்தை அபகரித்து முகேஷ் அம்பானி தனது கனவு இல்லமான ஆண்டீலியாவை கட்டியதாக புகார் எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி முஸ்லிமே ஹிந்த் என்ற அமைப்பு மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவுக்கு புகார் அளித்துள்ளது.
கரீம்பாய் இப்ராஹீம் கோஜா என்ற அநாதை நிலையத்திற்கு சொந்தமான இந்த நிலம், 2002-ஆம் ஆண்டு 21 கோடி ரூபாய்க்கு அம்பானிக்கு சொந்தமான ஆண்டிலியா கமர்சியல் ப்ரைவேட் லிமிடடிற்கு அவர்கள் விற்றுள்ளனர்.
நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பு 105 கோடி ரூபாய். ஆனால், மஹராஷ்ட்ரா வக்ஃப் துறை அமைச்சர் நவாப் மாலிக் இந்த விற்பனையை எதிர்த்தார். இதனைத் தொடர்ந்து இந்நிலத்தை விற்பனைச் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
2003-ஆம் ஆண்டு வக்ஃப் போர்ட் விற்பனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், இதுத் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.
ஆனால், அம்பானியின் ஆண்டிலியாவில் இருந்து 16 லட்சம் ரூபாயை பெற்ற வக்ஃப் போர்ட், புகாரை திரும்பப் பெற்றது. இதுக்குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என்று முஸ்லிமே ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
முகேஷ் அம்பானி, அரசு அதிகாரிகள், 2003-ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கும் வக்ஃப் அமைச்சர்கள் ஆகியோர் மீது விசாரணை கோரப்பட்டுள்ளது.
அம்பானிக்கும், குடும்பத்தினருக்கும் வசிக்க 200 கோடி அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்ட வீட்டிற்கு 27 மாடிகள் உள்ளன.

0 comments:
Post a Comment