Wednesday, February 19, 2014




இஸ்லாத்தின்  பார்வையில்...

தனக்கு மிஞ்சியதைக் கொடுப்பது தர்மம்.
தனக்குள்ளதைக் கொடுப்பது தயாளம்.
தன்னையே கொடுப்பது தியாகம்.
இப்படி, தன்னை அர்ப்பணித்து வாழுகிற ஒவ்வொருவரும் உலகம் உள்ளவரை நினைக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்ல, மகாத்மாக்கள் ஆவார்கள். அந்த தியாகிகளின் வாழ்வு சரித்திரம் அல்ல, சகாப்தம் என்பது உலகமறிந்த செய்தி.
தேசப்பற்றோடு தன்னலம் இல்லாத பொது நலமும், சேவை மனப்பான்மையும் இன்றைய தலைமுறைக்கு அவசியம் – என்பதே இந்த தியாகிகள் தினம் நமக்கு அழுத்தமாய் சொல்லுகிறது.
மனிதன் உட்பட உலகில் வாழும் சகல உயிர்களுக்கும் அர்ப்பணிப்புடன் சிறு சிறு சேவைகளை செய்வதின் மூலம் மனிதன் ஈருலகிலும் உயர்வான நற்பாக்கியங்களைப் பெறுகிறான் என்கிறது இஸ்லாம்.
‘தாய் தந்தையாருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உங்களைச் சார்ந்த அண்டை வீட்டாருக்கும், (தொழிலில், பயணத்தில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கருக்கும், அடிமைகளுக்கும் சேவை செய்யுங்கள்’ எனக் கட்டளையிடுகிறது திருக்குர்ஆன் (4:36).
ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: ‘ஒரு சமயம் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்தோம். எங்களில் சிலர் நோன்பு நோற்றிருந்தனர். சிலர் நோன்பு நோற்கவில்லை. வெப்பமான அந்நாளில் நாங்கள் ஓரிடத்தில் தங்க நினைத்தோம். அது சமயம் நோன்பு நோற்றவர்கள் சோர்ந்து உட்கார்ந்து விட்டனர். ஆனால், நோன்பு நோற்காதவர்கள் தங்குவதற்கான கூடாரங்களை அமைத்தனர். கால்நடைகளுக்கு நீர் புகட்டினர்.
இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘இன்றைய தினம் நோன்பு நோற்காதவர்கள் சமூகத் தொண்டு செய்து அதிக நன்மையை பெற்றுச் சென்றனர்’ என்று கூறினார்கள்.
ஆக, மக்கள் சேவை என்பது இறை வணக்கத்திற்கு நிகரான நன்மைகளையும், அந்தஸ்தையும் நமக்கு பெற்றுத் தருகிற உயரியப் பணியாகும் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெருமானார் தன் சிறுவயதிலே மக்கள் பணியிலே மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். ‘ஹில்ண்புல் புலூல்’ என்ற ஒரு சமூக நலமன்றத்தில் இணைந்து ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார்கள்.
‘இப்படி மக்கள் களப்பணியாற்றியது என்பது என்னிடம் செந்நிற ஒட்டகைகள் (அன்றைய அரபுலகத்தின் உயர்ந்த சொத்தாக விளங்கியது) இருப்பதை விட மிகப் பிரியமானதாகும்’ என்றார்கள் நாயகம்.
‘ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் உதவி புரிந்து வருபவன் அல்லாஹ்வின் பாதையில் உதவி புரிந்தவனைப் போன்றவனாவான். சோர்வின்றி இரவு வணக்கம் வணங்கியவனைப் போன்றவனாவான். நோன்பு திறக்காமல் நோன்பு நோற்றவனைப் போன்றவனாவான்’ என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.
ஆக பெருமானார் (ஸல்) அவர்களின் இந்நபிமொழிகள் மானுட உலகை சேவைக் களத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது என்பது எத்துனை மகத்தானது.
மக்கள் பணியையும், அதற்கான அர்ப்பணிப்பையும் சொல்கிற இவ்வேளையில் ஒரு இஸ்லாமியனின் தியாகம் எதன் அடித்தளத்தில் அமைய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இஸ்லாம் வலியுறுத்துகிற சேவையும், தியாகமும் இறைவனை மையப்படுத்திய ஒன்றாகும்.
ஒரு இஸ்லாமியனின் தியாகம் என்பது வெறும் அர்ப்பணிப்போடு நில்லாமல், அவனையும், அவனின் எண்ண ஓட்டத்தையும் இறைவனோடு சங்கமிக்கச் செய்கிற மூலமாகும்.
காரணம் என்ன தெரியுமா? தனக்காக வாழ்ந்தவர், அவர் உயிரோடு உள்ளவரை நினைக்கப்படுவார்.
குடும்பத்துக்காக வாழ்ந்தவர், குடும்பத்தார் உள்ளவரை நினைக்கப்படுவார்.
நாட்டுக்காக வாழ்ந்தவர், நாட்டினர் உள்ளவரை நினைக்கப்படுவார்.
ஆனால்... இறைவனுக்காக வாழ்ந்தவர் மட்டும் என்றென்றும் நினைக்கப்படுவார்.
அது மட்டுமல்ல... இறைவனுக்காக வாழுகிற புனிதர்களிடம் மட்டுமே, முழுமையாக அர்ப்பணித்து வாழுகிற தூய சேவை மனப்பான்மையையும், கலப்படமற்ற பொது நலப்பற்றையும், பிரதிபலன் பாராத மக்கள் பணியையும் நிறைவாக நாம் காண முடியும் என்பதே இஸ்லாமின் கூற்றாகும்.
இஸ்லாமியர்களின் இரு பெருநாட்களில் ‘ஈதுல் அல்ஹா’ என்பது  இப்ராஹிம் (அலை), ஹாஜரா (அலை), இஸ்மாயில் (அலை) என்கிற ஒரு சிறிய குடும்பத்தின் பலதரப்பட்ட தியாகங்களை நினைவு கூருகிற ‘தியாகத் திருநாள்’ ஆகும்.  
இறைவனுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு குடும்பத்தின் தியாகம் ஐயாயிரம் ஆண்டுகள் கடந்த போதிலும் கூட, மறவாமல் நினைவுகூர்ந்து அதை இஸ்லாமிய உலகம் தனக்கான ஒரு பெருநாளாக கொண்டாடுகிறது. அக்குடும்பத்தின் தியாகத்தைப் பின்பற்றி நாமும் ஒவ்வொரு வருடமும் அந்நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஒன்றில் ஏதேனும் ஒன்றை இறைவனுக்காக அறுத்து பலியிட வேண்டும் என்பதும், இறைவனின் கட்டளைகளில் ஒன்றாகிப் போனது.
இதன் பிரதானமே ‘நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் ஒட்டுமொத்த தியாகமும் இறைவனுக்கு மட்டுமே அமைந்தது’ என்பது மூலக் காரணமாகும்.
ஆக, உலக ஆசைகளை துறந்து, இறைவனுக்காக தூய வடிவில் தன் வாழ்வை அமைத்துக்  கொள்கிற ஒவ்வொருவனும் இறைவனின் பொருத்தத்தை பெற்ற தியாகச் செம்மலாகிறான். மேலும், நபி இப்ராஹிம் (அலை) அவர்களைப் போன்று கலீலுல்லாஹ் (இறைவனின் நண்பன்) என்கிற உயரிய இடத்தையும் பெறுகிறார்கள்.
இறைவனின் நியதியின் பிரகாரம், உடலாலும், உயிராலும், பொருளாலும் நபித்தோழர்களும், ஸஹாபியப் பெண்களும் செய்த தியாகமும், அர்ப்பணிப்பும் தான் நாம் ஒவ்வொருவரும் இன்று இஸ்லாமியனாக இருப்பதற்கான   மூலமாகும்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர்கள் பட்ட துன்பத்தை என்ன வென்று சொல்வது?
ஸூஹைப் ஸினான் (ரலி) அவர்கள் நினைவிழக்கும் வரை அடிக்கப்பட்டார்கள்.
பிலால் (ரலி) அவர்களின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு மக்காவின் கரடு முரடான பாதையில் வெற்றுடலோடு இழுத்துச் செல்லப்பட்டார்கள்.
சுமைய்யா பின் கய்யாத் (ரலி) என்ற ஸஹாபியப் பெண் ஈட்டியால் குத்திக் கொலைச் செய்யப்பட்டார்கள்.
கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்கள் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும், முதுகிலும் சூடி வைக்கப்பட்டார்கள்.
ரோம் நாட்டை சேர்ந்த ஜின்னீரா (ரலி) என்ற பெண்ணுக்கு செய்யப்பட்ட பல்வேறு விதமான கொடுமையால் பார்வையை இழந்தார்கள்.
ஆமிர் புஹைர் (ரலி) அவர்கள் பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு தாக்கப்பட்டார்கள்.
இறைவனுக்காக தான் பிறந்த மண்ணை விட்டு மதீனாவிற்கு புலம் பெயருகிற நபித்தோழர்கள் இறைவனையும், அவனின் தூதரையும் மட்டுமே தங்களின் செல்வமாக எடுத்துச் சென்றார்கள் என்கிற ஹிஜ்ரத் பயணமே இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும், அதன் உலகமயமாக்கலுக்கும் அடிகோலியது என்பது சரித்திரம்.
செல்வந்தராக சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பசியோடும், பட்டினியோடும் இருப்பது அன்றாட வாடிக்கையாகிப் போனது மட்டுமல்ல, அவரின் மரணித்த புனித சடலத்தை மறைப்பதற்கும் போதிய துணியில்லை என்ற வரலாற்றின் வரிகள் நம் கண்களை குளமாக்கி விடுகிறது.
யுத்தக் களத்தில் பங்குப் பெற்று இறைவனுக்காக போர் செய்து அதில் தன்னுயிரை நீத்து வீர மரணம் அடைவதை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டார்கள் நபித்தோழர்கள்.
இப்படி உள்ளங்களை உறைய வைக்கிற அத்துணை தியாகங்களையும் நபித்தோழர்கள் இறைவனுக்காக செய்வதில் பேரானந்தம் அடைந்தார்கள்.
அதன் விளைவே ‘இறைவனின் பொருத்தத்தை பெற்ற நல்லடியார்கள் நபித்தோழர்கள்’ என இறைவன் திருக்குர்ஆனில் அவர்களை அடையாளப்படுத்துகிறான்.
‘நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள். அவர்களுடைய (நற்)கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உள்ள நிலையான சுவர்க்கச்சோலைகளாகும்’ (திருக்குர்ஆன் 98:8) என்று இறைவன் கூறுகிறான்.
உலகின் ஒவ்வொரு அசைவும் இத்தியாகிகளின் அர்ப்பணத்தாலே தீர்மானிக்கப்படுகிறது என்பதே உலக நியதி என்பதை உணர்வோம். தியாக மனப்பான்மையோடு வாழ்வோம்.
தியாகிகள்  தினம்
நாம் ஒவ்வொருவரும் விடுதலைக் காற்றை சுவாசிக்க தங்கள் ஜீவ சுவாசத்தை விட்டுக் கொடுத்த ஒவ்வொரு வீரத் தியாகிகளையும் நினைவு கூர்வதின் மூலம் இளம் நெஞ்சங்களில் பொது நலப்பற்றை விதைப்பதற்காக தேச தந்தை காந்தியடிகள் மறைந்த தினத்தை (ஜனவரி 30) நம் அரசு தியாகிகள் நாளாக அனுசரித்து வருகிறது.
நிறம்  மாறும்  பஞ்சவர்னேஸ்வரர்
*    கும்பகோணம் அருகில் உள்ள நல்லூரில் அமைந்திருக்கிறது பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம். இங்கு வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் திருமேனி ஒரு நாளைக்கு ஐந்து முறை பல வர்ணங்களில் நிறம் மாறுவதால் பஞ்சவர்னேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
*    கும்பகோணம் அருகில் திருவெள்ளியங்குடியில் அமைந்துள்ள கோலவிழி ராமன் பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி அருள் பாலிக்கிறார். இது 108 திவ்ய தேசத்தில் இங்கு மட்டுமே காணக்கூடிய அற்புத காட்சியாகும்.
மவுலவி எம்.ஏ. முஹம்மது லுத்புல்லாஹ் பிலாலி, பள்ளப்பட்டி.

0 comments:

Post a Comment