
பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரிந்து வாழ்கிறார்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஊராட்சியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தினேஷ்குமார்(வயது 28). இவருக்கும் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ராச்சாண்டார் திருமலை கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவரது மகள் மருதம்மாளுக்கும்(24) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் திவான் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தினேஷ்குமாருக்கும், மருதம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மருதம்மாள் தனது பெற்றோர் வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார்.
தீக்குளிக்க முயன்றார்
கடந்த சில மாதங்களுக்கு வரதட்சணை கேட்டு தன்னை தனது கணவர் கொடுமைப்படுத்தியதாக மருதம்மாள், தினேஷ்குமார் மீது பாடாலூர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் மருதம்மாள் குளித்தலை நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.
மனைவியுடன் சேர்ந்து வாழமுடியவில்லையே என்று மனம் உடைந்த தினேஷ்குமார் நேற்று இரவு 7.50 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த தினேஷ்குமார் திடீரென்று தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
சேர்த்து வைக்க நடவடிக்கை
இதைபார்த்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள், தினேஷ்குமாரை மீட்டு பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தினேஷ்குமார், தன் மீது தனது மனைவி கொடுத்துள்ள புகாரை திரும்ப பெறச்செய்து பிரிந்து வாழும் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தினேஷ்குமார் கூறினார். அதனை கேட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment