Tuesday, May 27, 2014

நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று,  சொந்த ஜாமீன் பத்திரம் அளித்ததை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்ட இந்தியாவின் முக்கிய ஊழல் தலைவர்களின் பட்டியலில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி பெயர் இடம் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து கெஜ்ரிவால் மீது கட்கரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த வழக்கு கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை ரூ.10,000 மதிப்பிலான ஜாமீன் பத்திரம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கொள்கை ரீதியாக தாம் ஜாமீன் கோர விரும்பவில்லை என கூறி அதனை ஏற்க கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். இதையடுத்து, கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையடுத்து, கெஜ்ரிவாலின் காவல் முடிந்ததையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் ஜாமீன் கோரவில்லை. இதையடுத்து அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தது சட்ட விரோதமானது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி ஆட்கொணர்வு மனு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணை நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் எஸ்.மிரிதுல் ஆகியோர் முன்னிலையில் இன்று வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ”அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சட்ட ஆலோசனை தேவை. கெஜ்ரிவால் ஜாமீன்பத்திரம் எழுதி தரவேண்டும். இது ஒரு சிறிய விவகாரம். இதை  தன்மான பிரச்னையாக கருதக்கூடாது. இதை கெஜ்ரிவால் ஏன் பெரிதுபடுத்துகிறார் என்று தெரியவில்லை” என்றனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை எடுத்துக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட கெஜ்ரிவால், ஜாமீன் பத்திரம் எழுதி கொடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கெஜ்ரிவாலை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
கடந்த 21ஆம் தேதிடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, இந்த 7 நாள் சிறைவாசமே ஜாமீன் பத்திரம் எழுதிக் கொடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment