Wednesday, August 6, 2014

காவல் பணி என்பது நேரம் வரையறுக்கப்பட்டு செய்யும் பணி அல்ல என்பதால் காவலர்களுக்கு 8 மணி நேர பணி நிர்ணயிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, காவலர்களின் பணி சுமையைக் குறைக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, தே.மு.தி.க. உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுகையில், “காவல் துறையினருக்கு 8 மணி நேர பணி நிர்ணயிக்க வேண்டுமென்ற கோரிக்கை இங்கே வைக்கப்பட்டது. காவல் பணி என்பது நேரம் வரையறுக்கப்பட்டு செய்யும் பணி அல்ல. ரோந்து பணி, சட்டம் ஒழுங்கு, நீதிமன்ற பணி மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். காவலர்களின் பணி சுமையினை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்படுகிறது.
மேலும், கூடுதல் நேர ஊதியம், உணவுப் படி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. காவலர்களின் பணி சுமையைக் குறைக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உறுப்பினர் பேசுகிறபோது, என்னுடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் காவலர்கள், காவல் துறையினர், தங்கள் குறைகளைத் தெரிவிக்க முகாம்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அத்தகைய முகாம்கள் ஏதும் நடத்தப்படவில்லை. நான் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் காவல் துறையினரை வரவழைத்து அவர்கள் என்ன குறைகள் இருந்தாலும், என்ன புகார்கள் இருந்தாலும், என்ன மனுக்கள் கொடுக்க விரும்பினாலும் என்னிடம் கொடுக்கலாம் என்று பல நாட்கள் காவல் துறையினரைச் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய மனுக்களைப் பெற்று உயர் அதிகாரிகளுக்கு காவல் துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பி வைத்தேன்.
அதன் பின்னர், முகாம்கள் ஏதும் நடத்தப்படவில்லை. இது வரைமுறை செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து மாதத்திற்கு ஒரு முறை தங்கள் மேலதிகாரியிடம் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மாவட்டங்களில் காவல் துறையினர் தங்கள் குறைகளை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் கொடுக்கிறார்கள். ஆணையரகங்களில் அந்தந்த கமிஷனரிடம், காவல் துறையினர் தங்கள் புகார்களையும் குறைகளையும் தெரிவிக்கிறார்கள். இது முறையாக நடந்து வருகிறது. மாதத்தில் ஒரு நாள் உயர் அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரியும் காவல் துறையினரிடம் கேட்டு மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment