Monday, September 29, 2014

தவறுக்கு தண்டனை கிடைத்து ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயுள்ளார். ஆனால் தங்களது அன்புக்கு கிடைத்த தண்டனையாக, அதை அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள். கலங்கிப் போய் நிற்கிறார்கள்,துடித்துப் போய் மரணத்தை முத்தமிடவும் முயல்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்குப் போன சோகத்தால் இதுவரை தமிழகம் முழுவதும் 14 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது.

தங்களைப் பெற்ற தாய் மீது கூட அதிமுக தொண்டர்கள் இவ்வளவு அன்பாக அம்மா என்று உருகியிருக்க மாட்டார்கள். மாறாக ஜெயலலிதாவை அந்த அளவுக்கு அவர்கள் நேசிக்கிறார்கள், வயது வித்தியாசம் இல்லாமல் அம்மா என்று அழைக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். மீது அதிமுகவினர் வைத்துள்ள பாசத்தை விட, மரியாதையை விட பல மடங்கு பாசமும், மரியாதையும் ஜெயலலிதா மீது இப்போதைய அதிமுகவினருக்கு உள்ளது. அந்த ஜெயலலிதா சிறைக்குப் போனதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வேண்டாத தெய்வம் இல்லை

ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்று வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போகாத கோவில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை, செய்யாத பிரார்த்தனை இல்லை. ஆனால் மைக்கேல் குன்ஹா அவர்களைக் கைவிட்டு விட்டார்.

நம்பிக்கையில் இனிப்புகளும், பட்டாசும்

ஜெயலலிதா எப்படியும் விடுதலை ஆகி விடுவார் என்ற பெரும் நம்பிக்கையில் அதிமுகவினர் இருந்தனர். காரணம் இதற்கு முன்பு 13 வழக்குகளில் அவர் விடுதலையாகியிருந்ததால். இதற்காக பட்டாசுகளையும், லட்டுக்களையும் வாங்கி வைத்திருந்தனர். பல இடங்களில் முன்கூட்டியே அதை விநியோகிக்கவும் செய்தனர். ஆனால் நம்பிக்கை பொய்த்துப் போனது.

அழுதுபுலம்பிய தொண்டர்கள்

ஆனால் ஜெயலலிதாவுக்கு ஜெயில் என்ற செய்தி பரவியதும் தமிழகமே ஸ்தம்பித்துப் போனது. ஏன் மாற்றுக் கட்சியினரே கூட ஒரு சில மணி நேரங்களுக்கு அமைதியாகி விட்டார்கள். காரணம், தீர்ப்பு வரும், தண்டனை கிடைக்கும் என்று மட்டுமே அனைவரும் எதிர்பார்த்தனரே தவிர இத்தனை கடுமையான தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. தீர்ப்பை அறிந்த அதிமுக தொண்டர்கள் அழுத காட்சி பல இடங்களில் நடந்தது.

இதுவரை 14 பேர் மரணம்

ஜெயலலிதாவின் தண்டனையைக் கேட்டு அதிர்ச்சியில் இதுவரை தமிழகம் முழுவதும் 14 பேர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிலர் தற்கொலையும் செய்துள்ளனர். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கும் போராடி வருகிறார்கள்.

மாணவியின் வேதனை.. கண்ணீர்

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஜோனஷா என்ற 19 வயது பிஏ மாணவி தற்கொலை செய்துள்ளார். அம்மா எனக்கு படிக்க எல்லாமும் கொடுத்தார். அவருக்கா சிறைத் தண்டனை என்று வேதனைப்பட்டபடி அவர் தூக்கில் தொங்கியுள்ளார்.
அதிமுகவினருக்கு ஜெயலலிதா இல்லாதது நிச்சயம் பெரும் அதிர்ச்சிதான்.. அரசியலிலும் ஜெயலலிதாவின் இடம் நிரம்பி முழுமை பெறுவதும் கடினம்தான்.

0 comments:

Post a Comment