Sunday, December 21, 2014

2005க்கு முன்பு அச்சிடப்பட்ட 500, 1000ம் ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு இன்னும் 11 நாள்தான் அவகாசம் ஜனவரி 1ம் தேதியுடன் கெடு முடிகிறது

புதுடெல்லி: வருடம் அச்சிடாமல் புழக்கத்தில் விடப்பட்ட 2005ம் ஆண்டுக்கு முந்திய ரூ.500, ரூ.1000ம் உள்ளிட்ட அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட காலக்கெடு வரும் ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது.

கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பது உள்ளிட்ட சில பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி, ரூபாய் நோட்டுகளின் மறுபக்கத்தில் கீழ் பகுதியில், வருடத்தை குறிக்கும் வகையில் எண்களால் அச்சிடப்பட்டு இருக்கும்.

இந்த ரூபாய் நோட்டுகளை கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, 2005ம் ஆண்டுக்கு முன்பு புழக்கத்தில் விடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் வருடம் அச்சிடப்பட்டு இருக்காது.

இந்த நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும், அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி அறிவித்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தியது. இந்த நோட்டுகள் திரும்ப பெறும் அதே நேரத்தில் சட்டப்படி செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில், வருடம் அச்சிடப்படாத நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வருடம் அச்சிடாமல் இருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் இன்னும் 11 தினங்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்ப வந்த ரூ.52,855 கோடிகடந்த மாதம் அக்டோபர் வரையில் பொது மக்களிடம் இருந்து 73.2 கோடி நூறு ரூபாய் நோட்டுகள் (ரூ.7,320 கோடி), 51.85 கோடி 500 ரூபாய் நோட்டுகள் (ரூ.25,925 கோடி), 19.61 கோடி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் (ரூ.19,619 கோடி) என மொத்தம் ரூ.52,855 கோடி மதிப்பிலான 144.66 கோடி நோட்டுகளை திரும்பப்பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment