Friday, December 19, 2014

தமிழ் உள்பட எந்த மொழியையும் இனி அலுவல் மொழியாக சேர்க்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அலுவல் மொழியாக்க முடியாது
டெல்லி மேல்–சபையில் நேற்று சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), தமிழ் மொழியை அலுவல் மொழியாக சேர்க்க வேண்டும் என்று தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய உள்துறை இணை மந்திரி ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி கூறும்போது, ‘‘மேலும் பல மொழிகளை அலுவல் மொழியாக சேர்ப்பதில் பல பின்விளைவுகள் உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் உள்பட பல வசதிகள் தேவைப்படுகிறது. எனவே இனி எந்த மொழியையும் அலுவல் மொழியாக சேர்க்க முடியாது’’ என்றார்.
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் முழு அமர்வு முன் பரிசீலனையில் இருக்கிறது என்றார்.


திருவள்ளுவர் பிறந்ததினம்
திருவள்ளுவர் பிறந்த தினத்தை தேசிய தமிழர் நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இது பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள புகழ்பெற்ற புலவர்களின் பிறந்த நாளையும் தேசிய அளவில் கொண்டாட வேண்டும் என்று கூறுவதற்கு வழிவகுக்கும்.

ஆனால் திருவள்ளுவரின் பங்களிப்பை போற்றும் வகையில் தேசிய அளவில் கொண்டாட திட்டம் உள்ளது. 2015–ம் ஆண்டில் திருவள்ளுவர் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் கட்டுரைப் போட்டிகள் நடத்த மனிதவள மேம்பாட்டு மந்திரி முன்மொழிந்துள்ளார்.

தி.மு.க. வெளிநடப்பு
இதுதவிர சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் திருக்குறளை மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க முடியாது என்று கூறியதற்கும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மறுத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சிவா (தி.மு.க.) வெளிநடப்பு செய்தார்.

சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), மெக்ராஜ் ஜெயின் (பா.ஜ.க.), ஆனந்த் பாஸ்கர் ரபொலு (காங்கிரஸ்) ஆகியோரும் இந்த தீர்மானத்தின் மீது பேசினார்கள்.

0 comments:

Post a Comment