Thursday, January 29, 2015

நெருங்கிய உறவினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால்  குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

“புற்றுநோய் வெல்ல முடியாதது அல்ல’ என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான  விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனையின் இரைப்பை- குடல் அறுவைச் சிகிச்சைத் துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புற்றுநோய் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளுக்கு பொது அறுவைச் சிகிச்சை, முதியோர் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, இரைப்பை- குடல் அறுவைச் சிகிச்சை ஆகிய துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் பதிலளித்தனர்.

நிகழ்ச்சியில் இரைப்பை- குடல் அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் கூறியது:
புற்றுநோய் என்றாலே அடுத்து உயிரிழப்புதான் என்ற அச்சம் எல்லோரிடமும் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. சரியான நேரத்தில் கண்டுபிடித்தல், முறையான சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தலாம்.

நெருங்கிய உறவினருக்கு புற்றுநோய் இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

உபயோகித்த எண்ணெய்:புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தை விட வாழ்க்கை முறை மாற்றங்களினால்தான் அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மறுமுறை உபயோகித்தல், மசாலாக்கள் தடவிய உணவுப் பொருளை நேரடியாக தீயில் சமைத்து உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றில் உள்ள காசினோஜன் எனப்படும் பொருள் உடலில் உள்ள நல்ல செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும் தன்மை உடையது.

மேலும் அதிக உப்பு பயன்பாடும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உப்புக்கண்டம், ஊறுகாய், கருவாடு, அப்பளம் போன்ற உணவுப் பொருள்களை தவிர்க்க வேண்டியதும் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment