Sunday, February 16, 2014

 
140216024921 

இந்தியாவில், இரண்டு ஆண்டுகளில், தங்கம் கடத்தல், மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 2013ன், ஒன்பது மாதங்களில், 1,000 கிலோ தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 500 கோடி ரூபாய். குறிப்பாக, சிங்கப்பூர், துபாய், இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து, தினசரி, 35 – 45 கிலோ தங்கம், விமானம் மூலம் கடத்தி கொண்டு வரப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்தின்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சில் தகவலின் படி, கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை, இந்தியா, 616.5 டன் தங்கத்தை இறக்குமதி செய்து உள்ளது.
தங்கத்தில் முதலீடு:
மத்திய அரசு, அன்னிய செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க, தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கும்படி, வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை தொடர்ந்து, தங்கத்திற்கான இறக்குமதி வரி, 6 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி ஏற்றமும், தங்க கடத்தலுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. தற்போது, தங்கத்திற்கு சுங்க வரியாக, 10 கிராமுக்கு, 442 ரூபாய் விதிக்கப்படுகிறது. கடந்த, 2012 – 13ல், 300 கிலோ தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது. இது, 2013ன், ஏப்ரல் – டிசம்பர் வரையான காலத்தில், மூன்று மடங்கு அதிகரித்து, 1,000 கிலோ தங்கமாக அதிகரித்துள்ளது. அதே போல், தங்க கடத்தல் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்துள்ளன. 2012ல், 154 பேர்; 2013ல், 514 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து, சென்னை, மும்பை, கோல்கட்டா மற்றும் கொச்சி விமான நிலையங்கள் வழியாகவே, அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுகின்றன.
இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தங்கம் கடத்தலில் ஈடுபடுவர்கள், திரைமறைவில் தான் செயல்படுகின்றனர். ஏழை மக்களையே, கடத்தலுக்கான கூலியாட்களாக பயன்படுத்துகின்றனர். இவர்கள், ‘குருவி’ என்ற அடைமொழியில் அழைக்கப்படுகின்றனர். 100 கிராம் தங்கம் கடத்தி வந்தால்,40 ஆயிரம் ரூபாய், கூலியாக அளிக்கப்படுகிறது. இதன் பிறகு, தங்க கட்டிகளை உருக்கி, ஆபரணங்களாக மாற்றி, 10 கிராமுக்கு, 2,000 ரூபாய் லாபம் கிடைக்கும் வகையில் விற்பனை செய்கின்றனர். ‘குருவி’யாக செயல்படும் நபர், 500 கிராம் தங்கத்தை கடத்தினால், 2,210 ரூபாய் வரி ஏய்ப்பு செய்கிறார். ஒரு கிலோ தங்கத்தின் விலை, இந்தியாவில், 31 லட்சம் ரூபாய்; துபாயில், 24 லட்சம் ரூபாய் தான். இது தான், இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிப்புக்கு முக்கிய காரணம். ரகசிய அறைகள் கொண்ட பிரத்யேக உடை; எலக்ட்ரானிக் சாதனங்கள்; சாக்லேட்; ‘சூட்கேஸ்’களின் அடிப்பகுதி என, பல்வேறு வகைகளில் தங்கம் மறைமுகமாக கடத்தி வரப்படுகின்றன. இதுதவிர, ‘குருவி’கள், ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
thanks dinamalar

0 comments:

Post a Comment