Saturday, February 22, 2014


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இஜாஸ் கான் என்பவரும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த டீனா சர்மா என்ற பெண்ணும் பங்கேற்றனர்.

“ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாதி ரீதியாக செயல்படுகிறாரா?” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவரிடமும், அதற்கான ஒருங்கிணைப்பாளர் கேள்வி கேட்டார். அப்போது இருவரும், காரசாரமாக விவாதித்து கொண்டு இருந்தனர்.

ஒரு கட்டத்தில் டீனா சர்மாவை, இஜாஸ் கான் தவறான வார்த்தைகளால் பேசினார். இதனால், டீனா சர்மா, கடும் கோபம் அடைந்தார்.

அப்போது நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்தவர், நீங்கள் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும், அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் அதை கான் ஏற்க மறுக்கவே ஆத்திரமடைந்த டீனா சர்மா, இஜாஸ் கான் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

பதிலுக்கு சர்மாவை கான் தாக்க முயற்சித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஓடி வந்து இருவரையும் பிரித்து விட்டனர்.

இந்த காட்சிகள், தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால், பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

0 comments:

Post a Comment