Wednesday, March 19, 2014

உலக அளவில் ஆயுதங்கள் இறக்குமதிச் செய்வதில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.ஆயுதங்களை ஏற்றுமதிச் செய்வதில் சீனா 4-வதுஇடத்தை பிடித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்காகவும், மற்ற நாடுகள் திடீர் தாக்குதல் நடத்தும்போது அவர்களை எதிர்கொள்ளவும் பல நாடுகளும் ஆயுத இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவும் பல நாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளின் ஆயுத இறக்குமதி குறித்து ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் நிலை குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

2009 – 2013 இடைப்பட்ட 5 ஆண்டு காலத் திலும், அதற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, உலக நாடுகளிடையே ஆயுத விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியை பொருத் தவரையில், இந்தகாலக்கட்டத்தில் இந்தியா அதிகளவில் ஆயுதங்களை வாங்கி உள்ளது.

2004-08ம் ஆண்டில், வாங்கியதைவிட தற்போது 111 சதவீதம் கூடுதலாக ஆயுதங்களை இறக்குமதிசெய்துள்ளது.அதாவது நாடுகளின் ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 7ல் இருந்து 14சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு 2009 – 13ம் ஆண்டில், அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடு ரஷ்யா, இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 75 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. நவீன காலத்துக்கேற்ப ஆயுதங்களைப் பெற்று வரும் இந்தியா, சில ஆண்டுகளுக்கு முன், விமானம் தாங்கி போர்க்கப்பல் விவகாரத்தினால் ரஷ்யா வுடன் முரண்பட்டு வந்தது.

தற்போது ரஷ்யா ஆயுதங்கள் வழங்கியதன் மூலம், இந்தியாவின் நட்பு நாடாக மாறியுள்ளது. ரஷ்யாவை தவிர் த்து மற்ற நாடுகளிடம் இருந்து மிகவும் குறைந்த அளவே இந்தியா ஆயுதங்களை வாங்கியுள்ளது. அமெரிக்காவிடம் 2009-13ம் ஆண்டில் 7 சதவீத அளவுக்கு ஆயுதங்களை பெற்றுள்ளது.

2009-13ம் ஆண்டில் பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதியை 119 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சியாகும். உலக அளவில் 5 சதவீதமாகும். அதேவேளையில் உலகளவில் ராணுவ ஆயுதங்கள் ஏற்றுமதியில் சீனா 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த ஏற்றுமதியில் கடந்த 4 ஆண்டுகளில் 212 சதவீதம் உயர்வை அடைந்துள்ளதையடுத்து பிரான்ஸ் நாட்டை சீனா பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து “ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ நடத்திய
ஆய்வில் கூறியிருப்பதாவது:

சீனா 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஏற்றுமதி செய்துள்ள ஆயுதங்கள் 212 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய 5 ஆண்டுகளில் 2 முதல் 6 சதவீத அளவிலேயே சீனாவின் ஆயுத ஏற்றுமதி உயர்வு இருந்தது. இது சீனாவின் ராணுவத் தொழில்துறை அபார வளர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது. சீனா தயாரிக்கும் ராணுவத் தளவாடங்களின் விலை குறைவு என்பது சிறப்பு அம்சமாகும்.

உலகில் மிக அதிக அளவில் ஆயுத ஏற்றுமதி செய்து வரும் அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தை சீனா தற்போது பிடித்துள்ளது.உலகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தில் உள்ள 35 நாடுகளுக்கு சீனா ஆயுத ஏற்றுமதி செய்துள்ளது.அவற்றில் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.தற்போது நைஜீரியாவுக்காக போர்க்கப்பல் கட்டி வரும் சீனா, ஆயுத விற்பனையை அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்குப் போட்டியாக விரிவுபடுத்தி வருகிறது

0 comments:

Post a Comment