சீட் மறுக்கப்பட்டதால் துக்கமடைந்த பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் ஜஸ்வந்த் சிங்கும், ஹரின் பதக்கும் சுயேட்சையாக போட்டியிடுவதாகஅறிவித்ததை தொடர்ந்து பா.ஜ.கவில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள உட்கட்சி பூசல் திரையை நீக்கி வெளிப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட பாஜகவின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் இருவருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.
ஜஸ்வந்த் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் ஆகிய இருவரும்தான் வசுந்தரா ராஜேவை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆவர்.
ராஜஸ்தானில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வசுந்தரா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை பாஜக மேலிடம் முதல்வராகத் தேர்வு செய்ததில் ஜஸ்வந்த் சிங் முக்கியப் பங்காற்றினார். அதன் காரணமாக, ஜஸ்வந்த் சிங்கின் காலைத் தொட்டு ஆசி பெற்றார் வசுந்தரா.
இதைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு ஜூன் மாதம், வசுந்தராவை ஹிந்து கடவுகளாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டரை எதிர்த்து ஜஸ்வந்த் சிங்கின் மனைவி போலீஸில் புகார் அளித்தார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு, வசுந்தராவுக்கும், ஜஸ்வந்த் சிங்குக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் உச்சகட்டமாக, பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு போதை விருந்து அளித்ததாக ஜஸ்வந்த் சிங் மீது குற்றம் சாட்டி, அது குறித்து சிஐடி போலீஸ் விசாரணக்கு வசுந்தரா உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, தங்களுக்குள் இருந்த பகைமையை மறந்து இருவரும் 2012இல் ஒன்றிணைந்தனர். பேரவைத் தேர்தலில் ஜஸ்வந்தின் மகனான மானவேந்திர சிங், ஷியோ தொகுதியில் போட்டியிட்டார்.அங்கு வசுந்தராவும், ஜஸ்வந்தும் ஒன்றாக இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, வசுந்தரா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், மானவேந்திர சிங்குக்கு தனது அமைச்சரவையில் வசுந்தரா இடம் அளிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் விரிசல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மக்களவைத் தேர்தலில் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அவர் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
பாஜகவில் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரைப் போல, ஜஸ்வந்த் சிங்கும் ஓரம் கட்டப்பட்டதாகக் கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர்.இந்நிலையில் பாஜகவில் மூத்த தலைவரான அத்வானியின் மற்றொரு ஆதரவாளர் ஹரீன் பாதக்கிற்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் கிழக்குத் தொகுதியில் போட்டியிட கட்சியிடம் விருப்பம் தெரிவித்திருந்த அவருக்குப் பதிலாக, நடிகர் பரேஷ் ராவல் நிறுத்தப்பட்டுள்ளார். இது குறித்து பாதக் கூறுகையில், “”பாஜகவில் கடந்த 3 மாத காலமாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கட்சியினரை காயப்படுத்தியுள்ளன.
காங்கிரஸில் இருந்துகொண்டு அண்மையில் நமது கட்சியை மிகவும் மோசமாக விமர்சித்தவர்கள், தற்போது பாஜகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இங்கு வாய்ப்புகளை பெறுகிறார்கள்.நரேந்திர மோடி பிரபலமாகத் திகழும்போது, இந்த நிலைப்பாட்டை கட்சி எடுப்பதற்கான அவசியம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.கட்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவேன்.
அத்வானி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இல்லாமல் செயல்படும் நாடாளுமன்றத்தை நாங்கள் கற்பனை செய்துகூட பார்க்க மாட்டோம்” என்றார். கடந்த 1989ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதக், வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்திருக்கிறார்.அதேவேளையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரும், 4 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான லால் முனி செளபே,பக்ஸார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், “”எனது முடிவை திங்கள்கிழமை அறிவிப்பேன்.கட்சியின் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது என்னை காயப்படுத்தியுள்ளது. வாஜ்பாய் ஒரு நடை பிணம் போல நடத்தப்பட்டு வருகிறார். அத்வானி மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் அலட்சியம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
இதற்கிடையே, அவரை பக்ஸார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அஸ்வினிகுமார் செளபே 4 மணி நேரம் சந்தித்துப் பேசி சமாதானப்படுத்த முயன்றது குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment