Tuesday, March 4, 2014


சென்னை போன்ற மாநகரங்களில் பல் அடுக்கு மாளிகை வியாபார தளங்களில் , கைலி அணிந்து செல்ல முடியாது என்பதை எதிர்க்கவே ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதற்கு பெயர் லுங்கி பிரவேசம் ,லுங்கி கட்டிக் கொண்டு உள்ளே வரக்கூடாது என்ற வாசகங்களை நம் ஊர் இந்து கோயில்களில் பார்க்கலாம். இந்தியாவில் குறிப்பாக தென்மாநிலங்களில் ஆண்கள் அதிகளவில் லுங்கி அணிகின்றனர். பெரும்பாலும் இரவு உடையாக லுங்கி அணிவதால் இதற்கு அவ்வளவுதான் மதிப்பு. முழங்காலுக்கு மேலே மடித்துக் கட்டியபடி, ரிலாக்சாக அனைத்து பணிகளையும் செய்ய முடியும். வயதானவர்களும் மைனரைப் போல லுங்கி உடுத்திக் கொண்டு வலம் வருகின்றனர். -இந்நிலையில்,கிட்டத்தட்ட நகரிலுள்ள அத்தனை தியேட்டர்கள் – ஹோட்டல்கள் – மால்களில் ஒரு வித நவீன தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். லுங்கி அணிந்து வந்தால் உள்ளே அனுமதி இல்லை என்பதே அத்தீண்டாமை. இதன்மூலம் அடித்தட்டு விளிம்புநிலை மக்களை வடிகட்டுவதே அவர்களின் நோக்கம்.

இம்மண்ணின் மரபுவழி உடையான லுங்கியையும், அதை உடுத்தும் பெரும்பான்மை மக்களையும் இழிவுபடுத்தும் முதலாளித்துவப் போக்கை முறியடிக்க நண்பர்கள் சிலருடன் 2014 மார்ச் 1 அன்று வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலுக்குள் லுங்கியுடன் நுழைந்தோம். பரிசோதனை செய்யும் இடத்தில் தடுத்து நிறுத்தப் பட்டோம். லுங்கி அணிந்து வந்தால் அனுமதி இல்லை என்றனர். அப்படியெனில் அறிவிப்பு எழுதி வையுங்கள் என்றோம். ஷாப்பிங் மால் மேலாளருக்கு தகவல் பறந்தது. ஐந்து நிமிடத்தில் அவர் ஓடோடி வந்தார். அவரும் அனுமதி மறுத்தார். எழுதிக் கொடுங்கள் என்றோம். வேறு வழியே இல்லாமல் உள்ளே விட்டார்.மகிழ்வுடன் மால் முழுவதும் சுற்றினோம். அனைத்து மக்களும் எங்களையே வேடிக்கைப் பார்த்தனர். இன்னும் நிறைய மால்கள் – ஹோட்டல்கள் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் லுங்கியுடன் நுழைவோம்.

ஆளூர் ஷாநவாஸ் @தின இதழ் செய்திகள்

0 comments:

Post a Comment