சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள 200 தங்க மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த மும்பையைச் சேர்ந்த 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
தங்கம் கடத்தல்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்திக்கொண்டு வருவதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து விமான நிலையத்தில் நேற்று காலை முதல் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்து கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. இதில் மும்பையை சேர்ந்த தீபக்ஆச்சாரியா (வயது 40), சர்பாத்கோஷ் (35) ஆகியோர் வந்தனர். இருவரும் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர்களை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
ரூ.30 லட்சம் தங்கமாத்திரை பறிமுதல்
அப்போது அவர்களிடம் இருந்த உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தபோது தங்க மாத்திரைகள் விழுங்கி வந்திருப்பதாக 2 பேரும் கூறினார்கள். விமான நிலையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றில் தங்க மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், 2 பேருக்கும் 6 மணி நேரம் இனிமா என்னும் மருந்து தரப்பட்டது. இதனையடுத்து 2 பேரின் வயிற்றில் இருந்து 200 தங்க மாத்திரைகளும் வெளியே வந்தன. இவற்றின் எடை 1 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இதையடுத்து மும்பையைச் சேர்ந்த 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வரும்போது தங்கத்தை கடத்தி வந்தது எப்படி? இவர்கள் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
0 comments:
Post a Comment