புதுடெல்லி: தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிப்பதற்காக மத்திய அரசு சட்டமியற்றினால்தான் அவற்றை நிரந்தரமாகத் தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அரசியல் சாசன சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க முடியும் என்று மத்திய சட்ட அமைச்சகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆலோசனை வழங்கியது.
இதுகுறித்து, சட்ட அமைச்சகத்துக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அரசியல் சாசன சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிப்பது, சட்டபூர்வமாக நிலையானதாக இருக்காது என்று கூறியுள்ளது.
மேலும் மத்திய அரசு சட்டமியற்றினால்தான் அவற்றுக்கு தடை விதிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கெனவே மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலும் அந்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் அவசரம் காட்டாத மத்திய அரசு, இது தொடர்பாக பரிசீலித்து கருத்து தெரிவிக்குமாறு சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் தில்லியில் கூறியதாவது:
தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக சட்ட ஆணையம் ஏற்கெனவே பரிசீலனை செய்து வருகிறது. இதில் தேர்தல் கருத்து கணிப்பை வெளியிடுவது முக்கிய பிரச்னையாக உள்ளது.
எனினும், தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போது சட்டம் கொண்டுவர முடியாது என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள சட்டத்தின்படி, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment