முந்தைய மன்மோகன்சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகம் எங்கும் தேக்கமடைந்த பொருளாதார சரிவு போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்வில் விலைவாசி உயர்வு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக பல பொய்களைக் கூறி பெரும் அறுவடை செய்து பா.ஜ.க. அரசு பதவிக் கட்டிலில் அமர்ந்தது.
பிரச்சாரம் முதலே விலைவாசி கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, சமமான கல்வி போன்றவை தான் முக்கியமாக இருந்தது. இந்த மூன்றுமே மக்களின் அடிப்படை தேவைகள் ஆகையால் எளிதில் நடுத்தர மக்களின் வாக்குகளைப் பெற்று அனைத்துக் கட்சியினரையும் பின் வாங்க வைத்து விட்டார் மோடி.
ஆனால் நடந்தது என்ன?
இதோ 30 நாட்கள் அரசின் நடவடிக்கை குறித்து ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் 25 விழுக்காடு மாத்திரமே மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து நல்லாட்சி என்று கூறியுள்ளனர். மற்ற 75 விழுக்காடு மக்கள் மோடியின் ஆட்சியை வசைபாடித் தாக்கியுள்ளனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சினையை மய்யமாகக் கொண்டு மோடியின் ஆட்சியை வெறுக்கத் துவங்கியுள்ளனர்.
பொதுவாக ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகுதான் விலைவாசி மற்றும் சிக்கலான நடவடிக்கைகளில் கை வைப்பார்கள். ஆனால் மோடியோ ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே தனது பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் விலைவாசி உயர்விற்கு சமிக்ஞை காட்டி விட்டார்.
விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் வரவு செலவு அறிக்கையில் மானியங்கள் குறைக் கப்படும் என்ற அபாய அறிவிப்பு வேறு வந்துள்ளது.
இது வட மாநிலங்கள் முழுவதிலும் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியுள்ளது. மானியம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே பெரிதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தற்போது அரசு விவசாயிகளுக்குத்தான் அதிக அளவில் மானியம் கொடுத்து வருகிறது. அப்படி மானியம் குறைக்கப்படும் போது விவசாயப் பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மராட்டியம் குஜராத் மத்தியப் பிரதேசம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில் மானியம் குறைக்கப்படுமேயானால் அரசே தற்கொலைக்கு தள்ளி விடும் நிலை உருவாகி விடும்.
தமிழகத்திலும் மோடி அரசு குறித்த வெறுப்பலை அதிகமாகவே வீசுகிறது. முக்கியமாக இதுவரை எந்த அரசும் மாநில அரசின் மொழிக் கொள்கையில் தலையிடாமல் இருக்கும்போது, தடாலடியாக இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தித் திணிப்பை துவங்கியுள்ளது. இது தமிழகம் மாத்திரமில்லாமல் பல மாநிலங்களிலும் பெரிதும் எதிர்ப்பை எதிர் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகம் பேச்சிற்காக ஒரு அறிக்கையை விட்டு இந்தி திணிப்பை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறினாலும், உள்ளூர் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. முக்கியமாக இந்தி வழக்கு மொழி அல்லாத மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் இந்தி பேசும் மாநிலத்தவர்களை மெல்ல மெல்ல தலைமைப் பதவிக்கு அமர்த்தும் வேலை நடக்கிறது. இது அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் கட்டாயமாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
ரயில்வே மற்றும் மத்திய வெகுசன அலுவலகங் களான பாஸ்போர்ட், கனரக தொழிற்சாலை, வங்கிகள் போன்றவற்றில் இந்த மாற்றம் வெகுவாக நடந்து வருகிறது.
ரயில்வே தேர்வில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது மாத்திரமல்லாமல் இந்தி பேசும் மாநிலத்த வர்களை அதிகம் தென் மாநிலங்களுக்கு பணி மாற்றம் செய்து அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது.
30 நாட்களில் மோடியின் அரசு மோசமான அரசாக அமைந்து விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிஜேபியினர் என்னென்னவெல்லாம் பேசினார்கள்! ஆளும் கட்சியான நிலையில் வேறு குரலில் பேசுவதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளத்தான் செய்வார்கள்.
நாடாளுமன்ற கூட்டம் நடத்திட சில நாள்களே உள்ள நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள் ளனர் – இப்படி செய்வது கொல்லைப் புறவழியில் கொள்ளையடிப்பது என்று கூறினவர்கள்தான் – பட்ஜெட் கூட்டத்துக்கு முன் ரயில் கட்டணத்தை இதுவரை கண்டிராத அளவுக்கு உயர்த்தியுள்ளார்கள் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளட்டும்.
நன்றி


0 comments:
Post a Comment