ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்காகப் பெருகியுள்ளது. அதே நேரத்தில் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. யூதர்களின் எண்ணிக்கையோ மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் மற்றும் பிராண்டன்போர்ஜ் மாநிலங்களின் புள்ளிவிவர மையத்தின் அறிக்கையில் இத்தகவல் காணப்படுகிறது. தேஜஸ் நாளிதழில் வெளியான இந்த அறிக்கையில் காணப்படுவதாவது:
பெல்லினில் 1992இல் கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்தது. 9.2 சதவீதம் முதல் 9.3 சதவீதம்வரை கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்த வேளையில், புராட்டெஸ்டண்டு கிறித்தவர்களின் எண்ணிக்கை 17.5 சதவீதம் முதல் 26 சதவீதம் சரிந்துவிட்டது. இது பெர்லினில் புராட்டெஸ்டண்டு பிரிவிக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடைசி சில ஆண்டுகளில் பெர்லின் நகரில், யூதர்களின் எண்ணிக்கை மறுபடியும் குறைந்து, 2011இல் சுமார் பத்தாயிரமாகச் சுருங்கிப்போயிற்று. ஆனால், பெர்லின் நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து வளர்ச்சியிலேயே இருந்துவருகிறது; பன்மடங்காகப் பெருகியுள்ளது. நகரில் 1,32,000 ஆக இருந்த முஸ்லிம்கள் 2,49,000 ஆக அதிகமாகியுள்ளனர்.
இன்னொரு புறம் ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டில் அடிக்கடி இஸ்லாம் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்ற அதே வேளையில், இஸ்லாத்தில் இணையும் ஹாந்து நாட்டினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறதாம்!
ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இஸ்லாத்திற்கு மாறியோர் குறித்து ஆய்வு செய்த பெண் ஆய்வாளர் வெனிஷா ஃபிரோன் நாஜிம் கூறுகிறார்:
புதிதாக இஸ்லாத்தில் இணைந்த 48 பெண்களைச் சந்தித்தேன். முஸ்லிம் ஆண்களை மணமுடிப்பதற்காகவே ஹாலந்து பெண்கள் இஸ்லாத்தில் சேருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அடிப்படையற்ற வாதமாகும் இது. நான் சந்தித்த 48 பேரில் 21 இளம்பெண்கள் திருமணமே செய்து கொள்ளாதவர்களாவர்.
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தில் இணைகின்றனர். தற்போது அவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹாலந்து மொழியில் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வழிகாட்டிப் பெண்கள் தேவை என்று கூறும் அவர்கள், தாய்மொழியில் உரைகளைக் கேட்பதற்கும் பயிலரங்கில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
தங்களின் மகள்கள் இஸ்லாத்தை ஏற்று பர்தா அணிந்து செல்வதைப் பார்த்து பெற்றோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஹாலந்தில் ஹிஜாபைப் பற்றிய தவறான கண்ணோட்டமே இதற்குக் காரணம்.

0 comments:
Post a Comment