Wednesday, June 25, 2014

கொழும்பு: மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில், விடுதலைப்புலிகளால்,1990ம் ஆண்டில், கடத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்கள் என அடையாளம் காணப்பட்ட இடங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தோண்டுமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் 1990ல் முறிந்து மீண்டும் போர் ஆரம்பமானபோது விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான சில கொடிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், 1990ம் ஆண்டு ஜுன் மாதம் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த குறிப்பாக காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் 165 பேர் குருக்கள்மடம் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளினால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கடலோரப்பகுதியில் புதைக்கப்பட்டதாக முஸ்லீம்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
படுகொலை செய்யப்பபட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் சிலர் அண்மையில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி போலீசில் முறையீட்டு மனு அளித்தனர். காத்தான்குடி நகர சபை உறுப்பினரான மஜீத் ஏ . றவூப் தனது உறவினர்கள் இருவர் தொடர்பாக அளித்த முறையீட்டு மனு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
தமது உறவினர்கள் இருவர் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடங்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என மஜீத் ஏ . றவூப் போலீஸ் விசாரணையில் தான் தெரிவித்ததாக கூறினார். சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவரால் அடையாளம் காட்டப்பட்ட கடலோரப் பகுதியில் தற்போது போலீஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment