Saturday, June 28, 2014


47_content_p2_3 (1) 
அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல்  வேலை நேரத்தில்  சிறுநீர்  வெளியேறுவதும்  பெண்கள்  எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. வயதானவர்கள்  மட்டுமல்ல  இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பல  காரணங்கள் இருக்கின்றன. பிறக்கும் போதே  சிலருக்கு  சிறுநீரக  பிரச்சினை  இருக்கும். வேறு சிலருக்கு  நரம்பு  சம்பந்தமான  பிரச்சினை  காரணமாகவும் இதுபோல் நிகழும். ஓமோன் பாதிப்பு,  நீரிழிவு  நோய், கர்ப்பகாலப் பிரசவம் ,  சிறுநீர்  பையில்  கட்டி மற்றும் ஓட்டை, சிறுநீர்  பாதையில் அடைப்பு,  மெனோபாஸ், காசநோய்.. என பல காரணங்கள் இதற்கு பின்னால் இருக்கின்றன. இயற்கையின்  படைப்பில்  பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர் வெளியேறும் யுரேத்திரா துவாரத்துக்கும்  இடையே மிகக் குறைவான இடைவெளிதான். அதாவது நான்கு முதல் ஐந்து செ.மீ.  தான் உள்ளது. ஆனால் ஆண்களுக்கு இந்த இடைவெளி  15 செ.மீ. தவிர, சிறுநீர் வெளியேறும் துவாரம்,  மலம் கழிக்கும் பகுதி, பிறப்புறுப்பின்  வாய் என எல்லாமே பெண்களுக்கு  அருகாமையில் அமைந்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றில்  தொற்று ஏற்பட்டால் கூட அது மற்றவற்றை பாதிக்கும்.  அடிக்கடி  சிறுநீர்  கழிக்கும் உணர்வு, சிறுநீர்  வெளியேறும் போது ஏற்படும் எரிச்சல்  மற்றும் வலி, அடிவயிற்றில் வலி… இவையெல்லாம் சிறுநீர் பிரச்சினைக்கான அறிகுறிகள். இதற்கெல்லாம் காரணம் கிருமிகள்.
இந்தப் பிரச்சினை  உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.  அதேபோல்  சிறுநீர்  கழித்ததும்  அந்தப் பகுதியை  சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிடாயின் போது  உறுப்புகளை சுத்தமாக தண்ணீர் கொண்டு முன் புறத்தில்  இருந்து பின் புறமாக கழுவவேண்டும்.   மாற்றி கழுவும் போது மற்ற உறுப்பு  துவாரத்தில்  உள்ள பக்டீரியா  கிருமிகள் சிறுநீர் கழிக்கும்  துவாரத்தில் தங்கி தொற்று ஏற்பட வழிவகுக்கும்.  முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் “ஸ்ட்ரெட்ஸ் யூரினரி இன்கொன்டினன்ஸ்’ என்ற பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சினையாலும் அதைச் சுற்றியிருக்கும்  தசைகள் தளர்வடைவதாலும் இந்தப் பிரச்சினை  ஏற்படும். இவர்கள் தும்மினாலோ ,  சிரித்தாலோ, இருமினாலோ, ஏதாவது எடையை தூக்கும்  போதோ அல்லது  குனிந்து நிமிரும் போதோ  சிறுநீர் கசிவு ஏற்படும்.
பொதுவாக  மற்றவர்கள் 4 முதல் 6 மணி வரை சிறுநீரை  அடக்க முடியும். ஆனால் இவர்களால் அடக்க முடியாது.  சிறுநீர்ப்பை  முழுக்க சிறுநீர் தேங்கி  இருக்கும் போது லேசான  தும்மல்  வந்தால் கூட பெரும் அளவில் கசிவு ஏற்படும்.  சிலர் அடக்க  முடியாமல்  சிறுநீர் கழிக்கவும்  வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்சினை சுகப் பிரசவத்தில்  குழந்தை பெற்றவர்கள்,   நரம்பியல்  குறைபாடு உள்ளவர்கள்,  சீறுநீர் நோயாளிகள்,   தண்டு வடம்  பாதிக்கப்பட்டவர்கள் ,  உடல் பருமனாக  உள்ளவர்களை அதிகம் பாதிக்கும். இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் அசௌகரியத்தால் அவர்கள் மனதளவில்  பாதிப்படைகிறார்கள். வெளியே சொல்லவும் கூச்சப்படுகிறார்கள். ஆனால் இனி  இந்தப் பிரச்சினையை  கண்டு கூச்சப்படாமல்  அதற்கான  நிபுணரை அணுகி  அறுவை சிகிச்சை மூலம்  பிரச்சினைக்கு  தீர்வு காணமுடியும் .
சுகப் பிரசவம் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு  சிறுநீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகம். கர்ப்ப காலத்தில்  கர்ப்பப்பை   குழந்தையை  சுமப்பதால்  அது விரிவடையும். அதனால்  அதன் அருகில்  இருக்கும்  சிறுநீரகப் பையில் அழுத்தம் ஏற்படும். இதுதான் கர்ப்ப காலத்தில்  அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணம். சுகப் பிரசவத்தில்  குழந்தை பிறக்கும்போது  அழுத்தம் கொடுப்பதால்  கர்ப்பப்பைச் சுற்றியுள்ள  தசைகளுடன்  சிறுநீரகப்  பையை சுற்றியுள்ள தசைகளும் விரிவடையும்.  இதனால்  சிறுநீர்ப் பையால் சிறுநீரை அதிக நேரம் அடக்க முடியாமல்  போகிறது. காலப்போக்கில்  சிறுநீர்ப்பை  அல்லது கர்ப்பப்பை  கீழே இறங்கி  போகவும் வாய்ப்புண்டு. அவ்வாறு  இறங்கி  போனால் அதை  அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.  சில குழந்தைகளுக்கு  பிறக்கும் போதே சிறுநீரக  பாதிப்பு  இருக்கும்.   இதற்கு “வெசிகோ யுரோத்ரிக்  ரிப்லெக்ஸ்’ என்று பெயர். இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு  சிறுநீரகத்தில்  இருந்து  வெளியாகும் சிறுநீர்,  பையில் தேங்காமல்  மறுபடியும்  சிறுநீரகத்துக்கே  யுரேட்டர் குழாய் வழியாகச் செல்லும்.  இதற்குக் காரணம் சிறுநீரை சிறுநீர்ப் பைக்கு  கொண்டு வரும் குழாயில்  ஏற்பட்டுள்ள பாதிப்பு.  இதையும் அறுவை சிகிச்சை மூலம்  குணப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சுரக்கும் ஓமோன்களின் அளவு குறைவாக இருக்கும்.  திசுக்களின் வளர்ச்சி  மற்றும் சீரான இரத்த ஓட்டத்துக்கு ஓமோன்கள்  மிகவும் அவசியம். இவை குறைவாக  சுரக்கும் போது பாதிப்பு ஏற்படும். இதனால்  சிறுநீர் குழாய்  செயல்பாட்டில்  பிரச்சினை  ஏற்படும்.  குழந்தைகள்  மற்றும் வயதானவர்கள்  மட்டுமல்லாமல் திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படும். திருமணமான புதிதில் பல பெண்கள்   சிறுநீர்  பிரச்சினையால் அ
வதிப்படுவார்கள்.  இது அந்த காலகட்டத்தில்  ஏற்படும் சாதாரண  விடயம்தான்.
நாளடைவில்  அது சரியாகி  விடும். சில சமயம் உடல்  உறவின் போது அவர்கள் பிறப்புறுப்பில்  ஏற்படும் பிரச்சினை  காரணமாக சிறுநீர்ப் பை பாதிப்படையும். அதற்குத் தகுந்த மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதும். அதேபோல் பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சினை இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தாமல்  சரி செய்து கொள்ள வேண்டும்.  முக்கியமாக யாருமே சிறுநீரை அடக்கக் கூடாது. குறிப்பாக பயணத்தின் போது இதற்காக  அந்த சமயத்தில்  தண்ணீரும்  குடிக்க மாட்டார்கள்.
இப்படி  செய்வது பிரச்சினைக்கு வாசலை திறந்து வைத்தது போல் ஆகும். ஒரு நாளைக்கு  தேவையான இரண்டரை லீற்றர் தண்ணீரை அனைவரும் பருக வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்  என்ற உணர்வு  இருக்கும். அடக்க முடியாது. வருகிறது என்று போனாலும் முழுமையாக போக முடியாது. சொட்டுச் சொட்டாக  வெளியேறும். குளிர் காய்ச்சல்  இருக்கும். சிறுநீர் கழிக்கும் இடத்தில்  எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். இது தவிர கருத்தடை சாதனம் பயன்படுத்துவதாலும் பெண்களுக்கு  சிறுநீர்ப்பை பாதிப்படையும். அதேபோல்  பிரசவக் காலத்திலும் சிறுநீர் தொற்று வராமல்  பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில்  அது குழந்தையை பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது

0 comments:

Post a Comment