Sunday, June 1, 2014

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தமிழக அரசு பள்ளிகளில், ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர், 2014-2015ஆம் கல்வி ஆண்டில், அனைத்து பள்ளிகளும் இன்று (2ஆம் தேதி) திறக்கப்படுகிறது.
இதையடுத்து, பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்குவதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தற்போது தமிழகத்தில், 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 57 லட்சம் பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 33 லட்சம் பேரும் என மொத்தம் 90 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு வழங்குவதற்காக 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு என மொத்தம் 4 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு என 2 கோடியே 20 லட்சம் புத்தகங்களும், 10 வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மாணவர்களுக்கு 2 கோடி புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளோடு, ஜாமெண்டரி பாக்ஸ், ஸ்கூல் பேக், செருப்பு உள்ளிட்டவைகளும் அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுவதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளி கல்வி இணை இயக்குனர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment