பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கக் கோரி மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
காஸா தாக்குதல் குறித்து விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டது போல், இன்று மாநிலங்களவையில் காஸா தாக்குதல் மீதான விவாதம் தொடங்கியது.
விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், "காஸா மீது தாக்குதல் வலுத்து வருகிறது. இந்தியா மவுனம் காத்துவருவது, வெளியுறவு கொள்கையில் இந்தியா மாற்றம் செய்துள்ளதா என்ற ஐயத்தை எழுப்புகிறது.
பாலஸ்தீனத்தில் நடைபெறும் படுகொலையை இந்தியா வேடிக்கை பார்த்து வருகிறது. இந்திய அரசு, இந்திய மக்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் காஸா பிரச்சினையில் அக்கறை காட்ட வேண்டும். அங்கு நடைபெறும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பாலஸ்தீனத்தில் பெரும் அளவில் அப்பாவி பொதுமக்களும், அவர்களது உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தில் பாதிக்கும் மேலானது மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தே கிடைக்கிறது. இந்நிலையில் காஸா மீதான தாக்குதலை கண்டித்து மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது அவசியம்" என்றார்.
ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்துக:
காஸா மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என டி.ராஜா மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.
இந்தியா நிலைப்பாடு என்ன?
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இஸ்ரேல் தாக்குதல் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்...

0 comments:
Post a Comment