Saturday, August 16, 2014

ஈராக்கின் 5 வது ஜனாதிபதி சதாம் ஹுசைன் பதவியில் இருப்பதற்காக  மிரட்டல், பீதி, மற்றும் அரச பயங்கரவாதம் போன்ற மிருகத்தனமான முறைகளைப்  பயன்படுத்தி 1979 முதல் 2003 வரை ஈராக்கில் ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தினார்.
1988ம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கிய குர்டிஷ் இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள், வாயுக்களை பாவித்து குர்டிஷ் நகரான ஹலாப்ஜாவில் 5000ற்கு  மேற்பட்ட மக்களை கொலை செய்தார். நாடு முழுவதும் சோதனைச் சாவடிகளை அமைத்து அரசின் அனுமதி இல்லாது மக்கள் நடமாடுவதை தடுத்தார்.
சிறிலங்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 5வது நிறைவேற்று ஜனாதிபதியான ராஜபக்ச,  இன்று அடோல்ப்  கிட்லரை மிஞ்சிய உலகின்; சர்வாதிகாரியாகவும், தனது பிராந்தியம், தனது சமயம், தனது இனம் என்பதோடு தமது குடும்ப உறவினர்களுக்கு முதன்மையான தனி ஆதரவு காட்டுவதில் முன்ணணி வகிக்கிறார்.
தமிழீழ விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இவர் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர். அத்துடன் கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரத்தை மறுத்ததுடன், பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும், அரசாங்கத்திற்கு எதிரான அமைதிக்கான ஒன்றுகூடல், கூட்டங்களை இரகசிய கண்காணிப்பில் அவதானித்து வருவதுடன், தமது அசை எதிர்ப்பவர்கள் மீது கடுமையான தடைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
வட-ஈராக்கில் வாழும் குர்டிஷ் மக்களுக்கு எதிராக 1988 ம் ஆண்டு, “அன்பால்” என்ற குறியீட்டுடன், சதாம் ஹுசைனினால் 50,000 மேற்பட்ட குர்டிஷ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் ஒரு சில சர்வதேச அமைப்புக்களினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 182.000 குர்டிஷ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஷியா முஸ்லீம் மற்றும் குர்திஷ் இயக்கங்களை சேர்ந்த ஆண்களை, அவர்களது குடும்பங்களிருந்து பிரித்து எடுத்து, மேற்கு மற்றும் ஈராக் தென் மேற்கு பாலைவனங்களில் படுகொலை செய்தார்.
இச் சம்பவங்கள், ராஜபக்ச தமிழீழ விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தில் செய்தவற்றை நினைவு கூருகின்றது. 70,000 முதல் 140,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியோரென பலஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
காணாமல் போனவரது சம்பவங்கள், விசாரணையற்ற கொலைகள், கற்பழிப்புகள் யாவும், “- தமிழீழ விடுதலை புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுகிறோம்” என்ற பெயரில் யாவும் நடைபெற்றன. ஜனாதிபதி ராஜபக்சவின் இக் கூற்று உண்மையானால், 2013 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் “பொதுமக்களை விடுவித்த” அரசு ஏன் வெற்றி பெறவில்லை?
கிராமங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கோயில்கள், தேவாலயங்கள், பண்ணைகள் போன்றவற்றை சதாம் ஹுசைனின் ஈவிரக்கமின்றி தாக்குதலினால; ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாய இடம்பெயர்விற்கு தள்ளப்பட்டனர்.
வடக்கு மற்றும் கிழக்கில், கிராமங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், பண்ணைகள் மீது தாக்குதல் நடைபெற்றதனால் அவ்விடங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாய இடப்பெயர்வை எதிர்கொண்டனர்.
பாடசாலை கட்டிடங்களின் கீழ் புதைகுழிகள்
சதாம் ஹுசைன் ஆட்சியின் போது 250 க்கும் மேற்பட்ட புதைகுழிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது பெரும்பாலும் 1983 மற்றும் 1991 இடையே சதாம் ஹுசைன் ஆட்சியை எதிர்த்த 300,000 மேற்பட்ட ஷியா முஸ்லிம் மற்றும் குர்டிஷ் மக்களினது புதைகுழிகளென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு இலங்கையில் இராணுவ நிலை கொண்டிருப்பதன் காரணங்களில் ஒன்றாக, இவ் இடங்களில் புதிய புதைகுழிகளை கண்டுபிடிக்காது தடுப்பதற்காகவே. வடக்கில் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உடல்கள், 2009ம் ஆண்டின் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாடசாலை கட்டிடங்களின் கீழ் உள்ளன. இவ் கட்டிடங்கள் யாவும், பாதுகாப்பு அமைச்சினால் வடமாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்பட்ட பொழுதும், இதன் உண்மை கதை வேறு. இக் கட்டிடங்களின் கீழ் புதைகுழிகள் யாவும் மறைக்கப்படப்பட்டுள்ளன.
சதாம் ஹுசைன் போல், மஹிந்த ராஜபக்ச பௌத்த சிங்களத்திற்கு வெளிப்படையான விசுவாசமான தனது ஆதரைவ கொடுத்து வருவதுடன். புத்த சமயத்திற்கு எதிரானவர்களை நசுக்குவதற்கு மறைமுகமான ஆதரவை கொடுத்து வரும் ஒரு வெறித்தனமான தலைவராக விளங்குகிறார். இவ் அடிப்படையில் உள்நாட்டில் போன்று, வெளிநாடுகளிலும் சில அமைப்புகளை அர்த்தமின்றி தடை செய்துள்ளார்.
அதிகாரத்தை தனது கையில் வைத்திருப்பதன் நோக்கமாக, தனிநபர் வழிபாட்டை சதாம் ஹுசைன் ஈராக்கிய சமுதாயத்தில் பரப்பி வந்துள்ளார். இதற்காக ஈராக் முழுவதும், அவரது உருவப்படங்கள், புகைபடங்கள், சுவரொட்டிகள், சிலைகள் ஆயிரக்கணக்கில் காணப்பட்டன. அவரது புகைப்படங்கள் அலுவலக கட்டிடங்கள், பாடசாலைகள், விமான நிலையங்கள், கடைகள், அத்துடன் ஈராக் நாணயங்களிலும் காணப்பட்டன. இதேவேளை மக்களை கவருவதற்காக ஈராக் விவசாயிகளின் பாரம்பரிய உடைகள்,  மற்றும் குர்திஸ் உடைகளை அணிவார். மேற்கத்திய உடைகளையும் அணிவதுண்டு.
சதாம் ஹுசைன் போல் ராஜபக்சவும், தேசிய உடையுடன் சிவப்பு சால்வை அணிந்து இவரது உருவப்படங்கள், சுவரொட்டிகள் சிறிலங்கா வீதிகள் தோறும் சகல இடங்களிலும் காணப்படுகிறது. ஆனால் 1991ம் ஆண்டு இவர் ஜெனீவா சென்றிருந்த பொழுது போது மேற்கு நாட்டு முறையில் உடை அணிந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குடும்ப ஆட்சி
சதாம் ஹுசைன் ஹுசைனின் தலைமையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுனி முஸ்லிம்கள் ஈராக்கின் முக்கியமான பதவிகளில் இருந்தார்கள்.
சதாம் ஹுசைனின் மகன்மாரான – கியூசே ஹுசேன் குடியரசு பாதுகாப்பு தலைவராகவும், உதய் ஹுசேன் ஒரு தனியார் சித்திரவதை முகாம், மற்றும் கற்பழிப்புகள் உட்பட பல பெண்களின் கொலைகளுக்கு பொறுப்பாகவிருந்ததுடன் ஈராக்கின் துணை இராணுவ குழுவின் தலைவராக கடமையாற்றினார். சதாம் ஹுசைனின் சகோதரர் இப்ராகிம் அல் டிக்கிரிடியும், ஈராக்கின் புலனாய்வு பிரிவின் தலைவராக கடமையாற்றினார்.
சதாம் ஹுசைனின் தகப்பனாரின் முதல் தாரத்து பிள்ளையான – இப்ராகிம் அல் டிக்கிரிட 1991ல் உள்துறை மற்றும் ஜனாதிபதி ஆலோசகராகவும், வளைகுடா போரின் போது ஈராக் பொது பாதுகாப்பு பணிப்பாளராகவும் கடமையாற்றினார். “கெமிக்கல் அலி” (இராசாயான அலி) என அழைக்கப்படும் அவருடைய மூத்த மைத்துனர் அலி ஹசன் அல் மஜீத், 1988ல் கிளர்ச்சி செய்த குர்திஷ்யர்கள் மீது இராசாயன தாக்குதலுக்கு வழி வகுத்தவர்.
ஹுசைன் கமால் ஹசன் அல் மஜீத், சதாம் ஹுசைன் மூத்த மகள்களை திருமணம் செய்து பல அமைச்சர் பதவிகளை வகித்தார் – இராணுவ தொழில் திணைக்கழகம் மற்றும் எண்ணெய் அமைச்சராக கடமையாற்றினார். இவரது சகோதரர் சதாம் கமால், சதாம் ஹுசைனின் இரண்டாவது மகளை திருமணம் செய்து குடியரசு படைக்கு தலைவராக பதவி வகித்தார்.
1995ஆம் ஆண்டில், இவர்கள் இருவரும் தங்கள் மனைவிமார்களுடன் ஈராக்கில் இருந்து தப்பி ஜோர்டானில் தங்கியிருந்தனர். இவர்கள் சதாமின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி, ஈராக் திரும்பிய வேளையில், துப்பாக்கி சமர் ஒன்றில் இருவரும் கொல்லப்பட்டனர்.
சதாம் ஹுசைனை தோற்கடித்த ராஜபக்ச
குடும்ப உறவினர்களுக்கானா ஆதரவில், சதாம் ஹுசைனை ராஜபக்ச தோற்கடித்து, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் நுழைந்துவிட்டார். குடும்ப அங்கத்தவர்களுக்கு முதலிடம், சலுகை, அமைச்சர் பதவியிலிருந்து ராஜதந்திரிப் பதவி வரை இவரது உறவினர்களையே காணக்கூடியதாகவுள்ளது. உலகில் விசேடமாக மத்திய கிழக்கில் மன்னர் ஆட்சியில் கூட இப்படியாக குடும்ப அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் முதலுரிமை கொடுத்தது கிடையாது.
சுருக்கமாக, மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச பாராளுமன்ற சபாநாயகர், அவரது சகோதரர்கள் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி பொறுப்பாகவுள்ளார், அடுத்த சகோதரர் பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவுள்ளார். ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் “அனைத்து அமைச்சுக்களிலும் தலையிடுவதுடன், ஊழலுக்கு பெயர்பெற்றவர்.
முக்கியமான அரசாங்க பதவிகளை வகிக்கும் மற்றைய குடும்ப உறுப்பினர்கள்: இவரது பெறாமகன் சஷிந்த்ரா – ஊவா மாகாண முதலமைச்சர், சமல் ராஜபக்ச (சபாநாயகர் இரண்டாவது மகன்), ஷமிந்திரா – சிறிலங்கா விமானச் சேவையின் பணிப்பாளரகவும்; உறவினர் ஊடஜன்கா வீரதுங்க – ரஷ்யாவின் தூதுவராகவும்; மற்றொரு உறவினர் விக்கிரமசூரிய – விமான போக்குவரத்து சேவையின் தலைவராகவும்; நிஷாந்த விக்ரமசிங்க என்ற உறவினர் – சிறிலங்கா விமானச் சேவையின் தலைவராகவும், பட்டியல் நீளுகிறது.
மேலும் தகவலுக்கு, கீழே உள்ள இணைப்பை பார்வையிடவும்.
http://sri-lanka.theglobalmail.org/family
சதாம் ஹுசைன், எண்ணெய் மற்றும் பிற தொழில்களில்களை தேசிய மயமாக்கப்பட்டதுடன், அரச வங்கிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.
ராஜபக்ச அல்லது அவரது சகோதரர்கள் ஏதேனும் கட்டிட திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டால், கொழும்பு தகவல்களின்படி, அந்த கட்டிடத்தின் சில மாடிகளை,  சந்தை விலையை விட மிக குறைவாக கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே நடந்தேறியுள்ளது என்பதே அர்த்தம். சிறிலங்காவில் இலாபத்துடன் நடைபெறும் அனைத்து நிறுவனங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் உள்ள பல நிறுவனங்களில் பாரீய பங்குகளை ராஜபக்ச குடும்பத்தினர் கொள்வனவு செய்துள்ளனர்.
சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்து நான்கு நாட்களுக்கு பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் ஈராக் மீது பொருளாதார தடை அறிமுகப்படுத்தப்பட்டது. இத் தடை 1990 ஆகஸ்ட் மாதம் முதல் 2003ம் ஆண்டு மே, சதாம் ஹுசைனின் வீழ்ச்சி வரை இத் தடை நீடித்தது.
ஈரான் ஈராக் யுத்தவேளையில் அமெரிக்கா ஈராக்கிற்கு துணை புரிந்தது. பொருளாதார உதவி, ஆயுதங்கள், இராணுவ புலனாய்வு மற்றும் பயிற்சியுடன் பெரும் தொகையான டொலர்களை அமெரிக்கா வழங்கியது.
சிறிலங்காவில் யுத்தத்தின் போது,  அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதரவு மட்டுமல்லாது,  முழு உலகத்தின் ஆதரவை, மிகைப்படுத்தப்பட்ட பொய்கள், பொய் வாக்குறுதிகள் கொடுத்ததன் மூலமே ராஜபக்ச அரசு பெற்றுக் கொண்டது. ஆனால் தற்பொழுது கதை வேறு!
ராஜபக்சவின் தலைவிதி
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிரேணைகள் வேண்டுகோள்களை சதாம் ஹுசைன் ஏற்க மறுத்ததுடன், ஐ.நா.விற்கும் மேற்கு உலகிற்கே சவலாக இவர் மாறினார். இவரது இரகசிய ஆயுத வளர்ச்சியை பார்வையிடுவதற்கு ஈராக்கிற்கு சென்ற ஐ.நா. உறுப்பினார்களை நாட்டுக்குள் அனுமதியாது அவர்களையும் அச்சுறுத்தினார்.
இங்கே, நாம் சதாம் ஹுசைனை, மஹிந்த ராஜபக்சவை ஒப்பிட முடியாது. ஈராக் மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் கொண்ட சக்தி வாய்ந்த நாடாகும். ராஜபக்சவோ, ஒரு சிறிய குளத்தில் தத்தளிக்கும் ஒரு சிறிய மீன். அதேசமயம், இவர் ஐ.நா.விற்கோ அல்லது மேற்கு நாடுகளிற்கோ சவால் விடுவது என்பது, யானையை பூனை சண்டைக்கு அழைப்பதற்கு சமமானது.
இறுதியில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுக்களிற்காக, சதாம் ஹுசைன், அமெரிக்க படைகளினால் கைது செய்யப்பட்டு, இக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
மஹிந்த ராஜபக்ச, அவரது சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக் குறியானதே? இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித நேயத்திற்கான எதிரான குற்றம், ஊழல் போன்றவற்றின் அடிப்படையில் பல சர்வதேச விசாரணைகள் நடைபெற்று இவர்களுக்கு தண்டனை வழங்கும் காலம் மிக தொலைவில் இல்லை.

thanks -  தமிழ் சொட்

0 comments:

Post a Comment