
அப்போது இஸ்ரேல் நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலை நிறுத்த ஐநா அமைப்பு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், போர் நிறுத்த ஒப்பந்ததை அறிவித்துவிட்டு, மீண்டும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னதாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் கொடூரத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உலகம் முழுவதும் நாடற்றவர்களாக சிதறிக்கிடந்த யூதர்களை, பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாகக் குடியேற்றி, அம்மண்ணை ஆக்கிரமித்து, அங்குள்ள பூர்வகுடிகளான அரபு இன மக்களை அடித்துத் துரத்தி அகதிகளாக்கி வருகிறது இஸ்ரேல். அமெரிக்க வல்லரசின் துணையோடும், ஐ.நா.வின் மறைமுக உதவியோடும் 60 ஆண்டுகளாக இஸ்ரேல் செய்து வரும் இந்த அடாவடியே, பிரச்சனைக்கான அடிப்படைக் காரணமாகும்.
முழு பாலஸ்தீனத்தையும் கபளீகரம் செய்யும் ஆதிக்க வெறியுடன் அலையும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் பெண்களையும் குழந்தைகளையும் குறிவைத்துக் கொன்று வருகிறது. உளவியல் ரீதியாக அம்மக்களை பலவீனப்படுத்தி அங்கிருந்து விரட்டுவதே இஸ்ரேலின் நோக்கமாகும். ஆனால், ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலை எதிர்கொள்ளவே திருப்பித் தாக்குவதாக இஸ்ரேல் பசப்பி வருகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தை சார்ந்தவர்கள்தான் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இரண்டுக்குமான வேறுபாட்டை உலக சமூகம் உற்று நோக்க வேண்டும். ரமளான் பெருநாளை முன்னிட்டு, 24 மணிநேர போர் நிறுத்தத்தை ஹமாஸ் இயக்கம் அறிவித்திருந்தபோதும், அந்த நாளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
எனவே, இஸ்ரேல் உடனான தூதரக உறவை ரத்து செய்ய இந்திய அரசை வலியுறுத்தியும், இஸ்ரேல் அரசுக்கு துணைபுரியும் அமெரிக்க அரசை கண்டித்தும், இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா.மன்றத்துக்கு கோரிக்கை விடுத்தும், வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறி இருந்தார்
0 comments:
Post a Comment