Saturday, August 2, 2014

புதுடெல்லி : மஹராஷ்ட்ராவில் போலீஸ் கஸ்டடியிலும், சிறையிலும் கொல்லப்படுவது சிறுபான்மையினர் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகளான வி.எம்.கானடே, பி.டி.கோடே ஆகியோரடங்கிய அமர்வு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.2012 - ஆம் ஆண்டு் மார்ச் மாதம் தானே மத்திய சிறையில் கொல்லப்பட்ட தாஜ் முஹம்மது அன்ஸாரி என்ற முஸ்லிம் இளைஞரின் தாயார் சமர்ப்பித்த வழக்கை விசாரிக்கும்போது நீதிமன்றம் இதனை தெரிவித்தது.
மஹராஷ்ட்ராவில் கஸ்டடி மரணங்கள் அதிகரித்திருப்பதாக ஆவணங்களை பரிசோதித்த நீதிமன்றம் தெரிவித்தது.அன்ஸாரியின் மரணம் இயற்கையானது என்று போலீஸ் அறிக்கையில் கூறியுள்ளது.இவ்வகையிலான அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.கஸ்டடியிலும், சிறையிலும் கொல்லப்படுபவர்களெல்லாம் சிறுபான்மையினரும், தலித்துகளுமாவர் என்று நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட அமிக்கஸ் க்யூரி யுக் சவுதரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட அஞ்சலோ என்ற இளைஞருக்காகவும் முன்னர் யுக் சவுதரி ஆஜராகியிருந்தார்.இவ்வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரித்து வருகிறது.அன்ஸாரியின் மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி அவரது தாயார் ஆலியா பேகம், கடந்த 2012-ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
மொபைல் பழுதுபார்க்கும் மையத்தில் வேலைப்பார்த்த தனது மகனை, 2012 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 21-ஆம் தேதி போலீஸ் கைதுச் செய்தது என்றும், மார்ச் 24-ஆம் தேதி அன்ஸாரி சிறையில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்றும் புகாரில் ஆலியா பேகம் தெரிவித்திருந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரப்படி 1999-2013 கால அளவில் இந்தியாவில் 1418 பேர் போலீஸ் கஸ்டடியில் மரணித்துள்ளனர்.இதில் 23 சதவீதமும் அதாவது 326 சம்பவங்கள் மஹராஷ்ட்ராவில் நடந்துள்ளது.

0 comments:

Post a Comment