Saturday, September 27, 2014

இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை பிரதமர் நரேந்திர மோடி நன்றாக புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரது அண்மைக்கால பேச்சு உணர்த்துவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலரும், மாநிலத் தலைவருமான கே.எம். காதர் மொய்தீன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், பொறையாரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நாகை வடக்கு மாவட்ட பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முஸ்லிம்கள் குறித்து தவறான சித்திரிப்புக்களை உருவாக்கும் வகையில், பல்வேறு தவறான கருத்துகளை கூறி வருகின்றனர்.

இதுபோன்ற பேச்சுக்களை பிரதமர் தடுத்து நிறுத்துவார் என நம்புகிறோம். இந்நிலையில், பிரதமரின் அண்மைக்கால பேச்சு இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை அவர் நன்றாக புரிந்து கொண்டுள்ளதை காட்டுகிறது.

பாபர் மசூதி பிரச்னை, பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றில் எல்லாம் பாஜக நினைப்பதை அப்படியே செயல்படுத்த முடியாது. அதற்கு மக்கள் ஆதரவும் இருக்காது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மோடி அலைக்காக கிடைத்த வெற்றிதானே தவிர, அக்கட்சியின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி அல்ல. அதனால்தான் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் விதமாக, சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், லக்னௌ என ஐந்து மண்டலங்களாக பிரித்து, தேசிய அளவில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

 இந்திய தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினரின் கலாசார அடையாளங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது என்ற கொள்கையின் அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து செயல்படும் என்றார்.

கட்சியின் மாநிலச் செயலர் ஏ.எம். ஷாஜகான், துணைத் தலைவர் நஸ்ருதீன், மாவட்டச் செயலர் அமீர் நூருல்லா, மாவட்டத் தலைவர் அபுல்ஹசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment