Friday, September 26, 2014

அரபு நாடுகள் வியந்து ஒரு பெண்மணியை பார்க்கின்றன. அப்பெண் மேஜர் மரியம் அல் மன்சூரி. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை வீராங்கனையான இவர், போர் விமானங்களை அனாயசமாக செலுத்துவதில் வல்லவர். இவர் எமிரேட்ஸின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

38 வயதான மரியம் சிரியாவின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய அரபு நாட்டுக் கூட்டுப் படை போர் விமானத்தை செலுத்திய வி்மானிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தில் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படையினருடன் இணைந்து அரபு நாடுகளின் விமானப்படையினரும் அதிரடியாக குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தினர். எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளும் இத்தாக்குதலில் இணைந்தன.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட விமானங்களில் ஒன்றை மரியம் செலுத்தி அரபு நாடுகளை அசத்தியுள்ளார். 38 வயதான மரியம், போர் விமானங்களை செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்கத் தயாரிப்பு எப் 16 ரக விமானத்தை படு வேகமாக செலுத்தி குண்டு வீசித் தாக்குவதில் இவர் சிறந்தவராம்.

 இளம் வயதிலேயே போர் விமான விமானியாக வேண்டும் என்பது மரியத்தின் கனவாக இருந்துள்ளது. ஆனால் சட்ட திட்டங்கள் இவருக்கு சாதகமாக இருக்கவில்லை. இதனால் குறிப்பிட்ட வயதுக்கு வந்ததும்தான் மரியம் தனது கனவை நனவாக்க முடிந்தது.

தற்போது சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகளில் குண்டு வீசித் தாக்கிய குழுவில் இடம் பெற்றுள்ள மரியம், தனி ஆளாக ரக்கா, இடிலிப், அலெப்போ ஆகிய நகரங்கள் மீது குண்டு வீசித் தாக்கி விட்டுத் திரும்பியுள்ளார்.

மரியம், அபுதாபியில் பிறந்தவர் ஆவார். அங்குள்ள கலீபா பின் சயத் விமானப்படை கல்லூரியில் படித்தவர். தனது விமான பயிற்சி குறித்து மரியம் கூறுகையில் தாம் பெண் என்பதால் எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. ஆண் வீரர்கள், விமானிகள் என்ன வகையான பயிற்சிகளைப் பெற்றார்களோ அதே பயிற்சி தான் தமக்கும் அளிக்கப்பட்டதாக கூறினார்.
 - Khaleejtimes

0 comments:

Post a Comment