Tuesday, December 9, 2014

திருச்சி விமான நிலையத்தின் அபார வளர்ச்சி ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர் இந்திய அளவில் 11 வது இடத்தை தக்கவைத்துள்ளது.
வாரத்துக்கு இரு விமானங்களே இயக்கப்பட்டு வந்த திருச்சி விமான நிலையம் கடந்த சில ஆண்டுகளில் வாரத்துக்கு 70-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் நிலையமாக அபார வளர்ச்சியை அடநைத்துள்ளது.

இதில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் (1 மில்லியன்) அதிகமான பயணிகள் பயன்படுத்தும் 11-வது நிலையமாகவும் திருச்சி சாதனை படைத்துள்ளது.
திருச்சி விமான நிலையம் கடந்த 1936-ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது என்றாலும் பயணிகள் விமானங்கள் 1948-வது ஆண்டிலிருந்துதான் இயக்கப்பட்டன.

1980க்கு பின்னரே முழு வீச்சில் பயணிகள் விமானப்போக்குவரத்துகள் துவங்கின. அதுமுதல் 2012-ம் ஆண்டுவரை சுங்கத்துறை விமான நிலையமாகவே திருச்சி இருந்து வந்துள்ளது.
அதன் பின் 2012 அக்டோபர் 4-ம் தேதிதான் சர்வதேச நிலையமாக தரம் உயர்த்தப்பட்டடது.

இந்தியாவில் தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை உள்ளிட்ட் விமான நிலையங்கள் மெட்ரோ நிலையங்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இவை 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வரும் சர்வதேச விமான நிலையங்களாகும். விமான நிலையங்கள் விமானப்படை மற்றும் பயிற்சி விமான நிலையங்கள் தவிர 3 வகையாக வகைப்படுத்தப்படுதின்றன. அவை, உள்நாட்டு விமான நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்கள், மற்றும் சுங்கத்துறை விமான நிலையங்கள் என்பனவாகும்.

இதில் சர்வதேச விமான நிலையங்களில் அதிக விமான போக்குவரத்துக்களை நடத்திவரும் குறிப்பிட்ட சிலவை மட்டும் மெட்ரோ விமான நிலையங்கள் என அழைக்கப்படுகின்றன. சுங்கத்துறை விமான நிலையங்கள் என்பது, உள்நாட்டு விமான நிலைய அந்தஸ்தில் இருந்துகொண்டு வெளிநாட்டு விமான போக்குவரத்துகளை இயக்கும் சிறப்பு அந்தஸ்து ஆகும். திருச்சி விமான நிலையமும் சுங்கத்துறை விமான நிலையமாக இருந்து கடந்த 2012-ம் ஆண்டு தான் சர்வதேச நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.

திருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானப்போக்கு வரத்தும் மேலும் பல நாடுகளுக்கு மாற்று (டிரான்சிட்) விமானப்போக்கு வரத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச நிலையமாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் திருச்சி விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகின்றது. மெட்ரோ விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் அதிகளவில் பயணிகளை கையாண்டு வருகின்றது என்பது அளப்பறிய சாதனையாக இருந்து வருகின்றது.

கடந்த நிதியாண்டில் 2013 ஏப் 1 முதல் 2014 மார்ச்-31 வரை திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்ற பயணிகள் விவரம். (சிவில் விமானப்போக்குவரத்து இயக்குனரக இணைய தளத்தில் வெளியிடப்பட்டது) :
2013 ஏப்ரல் மாதம் 74,365 பயணிகள், மே-83,154, ஜூன்-80,789, ஜூலை-75,836, ஆகஸ்ட்-79,639, செப்டம்பர்-81,515, அக்டோபர்-75,761, நவம்பர்-82,409, டிசம்பர்-95,668, 2014 ஜனவரி-1,02,920, பிப்ரவரி-89,917, மார்ச் 93,852 என மொத்தம் 10 லட்சத்து 15 ஆயிரத்து 825 பயணிகள் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 513 பேர் உள்நாட்டு பயணிகள், மீதி 8 லட்சத்து 96 ஆயிரத்து 312 பேர் வெளிநாட்டு பயணிகளாகும். இது முந்தைய நிதியாண்டை (2012-13) விட 16.76 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சியாகும். முந்தைய நிதியாண்டில் மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 30 பேர் பயன்படுத்தியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளின் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் எச். உபயதுல்லா கூறுகையில்,
திருச்சி விமான நிலையத்தை பொறுத்தவரை வெளிநாட்டு போக்கு வரத்துகள்தான் அதிகம். உள்நாட்டு போக்கு வரத்து சென்னையைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

ஆனால் இந்தியாவில் சுமார் 50 இடங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்றும், அதற்கான உள் கட்டமைப்புகள் இருந்தும் விமான நிறுவனங்கள் முன்வரவில்லை. முன்வரும் சில அரபுநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியும் கிடைப்பதில்லை. விமான நிலைய ஆணையமும் மேம்பாட்டுக்கான காரணங்களை ஆராயந்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவதாக கூறி வந்தாலும், லாபகரமாக இயங்கி வந்த திருச்சி செக்டாருக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்து விட்டது. சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு தினசரி 2 இயக்கம் வீதம் வாரத்துக்கு தலா 14 சேவைகள் இயங்கி வந்தது முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது அதே மார்க்கத்தில் ஏர் ஏசியா, மலிண்டோ, டைகர் என 3 நிறுவனங்கள் போட்டி போட்டு அனைத்து டிரிப்புகளும் 95 சதவிகிதம் நிரம்பிய இருக்கைகளுடன் இயக்கப்படுகின்றன.

அதேபோல சென்னையைத் தவிர வேறு எந்த உள்நாட்டுப் போக்குவரத்தையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நடத்தவில்லை. அப்படியிருந்தும் தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களின் இயக்கங்களால் திருச்சி விமான நிலையம் 1 மில்லியன் பயணிகளுக்கு மேல் கையாண்டு மெட்ரோ விமான நிலையங்களுக்கு அடுத்த இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது என்றார் அவர்.

0 comments:

Post a Comment