தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கை:
முத்துப்பேட்டை ஜாம்பவானோடை கிராமத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கே முஸ்லிம்களின் தர்கா ஒன்றும் உள்ளது. நேற்று (31.12.2014) இரவு சுமார் 11.30 மணியளவில் தர்காவைச் சேர்ந்த கலீல் ரஹ்மான் என்பவரையும், பள்ளிவாசல் இமாம் முஹம்மது என்பவரையும் 50க்கும் மேற்பட்ட இந்துத் துவாவைச் சேர்ந்த கூட்டத்தினர் செந்தில், சாமி செந்தில், சுரேஷ், ராஜகோபால் போன்ற குறிப்பிடத்தக்க நபர்களோடு மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அருவறுப்பாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், விளக்கு கம்பங்களில் உள்ள விளக்குகளையும் அடித்து நொறுக்கிவிட்டு அருகிலுள்ள தர்காவையும் கடுமையாகத் தாக்கிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு திரும்பும்போது முஸ்லிம் பெண்களையும் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
முஸ்லிம்கள் வழக்கம் போல் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்து, சட்டம் தன் கடமையைச் செய்யும் என அமைதி காத்து வருகின்றனர்.
தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் முத்துப்பேட்டையைப் பற்றி நன்கு தெரியும். அங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய சூழலில் இந்துத்துவாவினரால் தான் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கு முன்பும் பல தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால் ஒவ்வொரு முறையும் காவல்துறை, வழக்குப் பதிவு செய்வதுபோல் போக்கு காட்டிவிட்டு, சட்டரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் போராட்டங்களை மட்டுமே நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்போதும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டால் தேவையற்ற விளைவுகள் வரக்கூடிய காலங்களில் உருவாகும் என நாங்கள் அஞ்சுகிறோம்.
எனவே தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ரவுடித்தனம் செய்தவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இல்லையெனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்களை நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறோம்.
இவ்வாறு ஜே.எஸ்.ரிபாயீ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
செய்தி : மு.முகைதீன் பிச்சை.
0 comments:
Post a Comment