
பொக்காரா: நேபாள ஏர்லைன்ஸை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று 15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் காணாமல் போய்விட்டதாக விமானத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
அங்குள்ள சுற்றுலா பகுதி ஒன்றிலிருந்து ஞாயிறு மதியம் புறப்பட்ட அந்த விமானம் டேக் ஆஃப் செய்த சிறிது நேரத்திலேயே காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டது. பொக்காரா விமான நிலையத்திலிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட விமானம் 15 நிமிடங்களில் காணாமல் போனதால் அதை காவல் துறையினர் தேடி வந்தனர்.
14 ஆண்களும், ஒரு குழந்தை மற்றும் மூன்று பணியாளர்களும் என 18 பேர் அந்த விமானத்தில் பயணித்ததாகவும், அதில் ஒரு பயணி டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் என்றும், மோசமான வானிலை காரணமாக அர்காகாஞ்சி மாவட்டத்தில் உள்ள கிடிம் என்ற காட்டுப் பகுதியில் அது விபத்துக்குள்ளாகி உடைந்து நொறுங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விமானம் விழுந்துள்ள பகுதியில் தீப்பிழம்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை தெரிய வரும் என தெரிகிறது. எனினும் பயணம் செய்த 18 பேரும் மரணமடைந்திருக்கலாம் என்ற அச்சமேற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment