Monday, February 24, 2014

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி நிதி வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை தேர்தல் பிரசாரத்தை ஹரியானா மாநிலம் ரோதக்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
வெள்ளையர்களின் கிழக்கிந்திய கம்பெனி போல், தற்போது இந்த நாட்டை முகேஷ் அம்பானி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். 2000ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தபோது, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயு சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அப்போது 17 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் எரிவாயுவை 2.5 டாலருக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால் பின்னர் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்து, ஒரு யூனிட்டுக்கு 4 டாலராக அம்பானி உயர்த்திக் கொண்டார். அந்தத் தொகை வரும் 1ஆம் தேதி முதல், ஒரு யூனிட்டுக்கு 8 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பிற பொருள்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் பிரச்சாரத்துக்கும், தங்களைப் பற்றி விளம்பரம் செய்வதற்கும், ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும் பெருமளவு பணத்தை செலவு செய்து வருகின்றனர்.
இதற்கான பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? அவர்களின் பிரச்சாரத்துக்கு முகேஷ் அம்பானிதான் நிதி வழங்குகிறார். ஏனெனில் அவர்கள் 2 பேரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தனக்கு வெற்றிதான் என முகேஷ் அம்பானிக்கு தெரியும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை நாட்டுக்கு திரும்பக் கொண்டு வருவேன் என்று மோடி கூறுகிறார். ஸ்விட்சர்லாந்து வங்கியில் உள்ள அம்பானியின் சேமிப்பு கணக்கின் எண்ணை வெளியிட்டுள்ளேன். அதிலுள்ள பணத்தை நாட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் தைரியம் மோடிக்கு உள்ளதா?
ஒரு தொழிலதிபர் தனக்கு சொந்தமான ஊடகங்களில் நரேந்திர மோடி குறித்தும், ராகுல் காந்தி குறித்தும் அதிகமாக செய்திகளை வெளியிடும்படியும், எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளார் என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

0 comments:

Post a Comment