Wednesday, February 19, 2014


ராமநாதபுரம் தடியடி
மதுரை : ராமநாதபுரத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினரின் பேரணியில் காவல்துறையினர் நடத்திய தடியடியில்
காயம் அடைந்தவர்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மதுரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டீன்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தி, 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
முன்னதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இயக்க தினத்தையொட்டி பிப்ரவரி 17 ஆம் தியதி ராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற நிலையில், பேரணியில் சீருடை அணிதல், டிரம்செட் வாசித்தல் போன்றவை கூடாது என கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறையினர், பின்னர் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர் மீது கல் வீசியதாகக் கூறி, கூட்டத்தில் இருந்தவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், கடுமையான முறையில் தடியடியும் காவல்துறையினரால் நடத்தப்பட்டுள்ளது.  இத்தாக்குதலில் வழக்கறிஞர்கள், பாப்புலர் ஃபிரண்ட் உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட்  ஆப் இந்தியா அமைப்பின் வக்கீல்கள் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ், மதுரை உயர்நீதி மன்றக் கிளையில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:
காவல்துறையினரின் அனுமதியுடன் பேரணி நடத்தப்பட்டது. எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஊர்வலம் அமைதியாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் வக்கீல்கள் நஜ்முதீன், அலாவுதீன் உள்ளிட்ட பலருக்கும், பெண்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் ராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், அவர்களுக்கு தனியார் மருத்த்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
தடியடி நடத்திய தென்மண்டல போலீஸ் ஐ.ஜி அபய்குமார்சிங், டி.ஐ.ஜி (பொறுப்பு) ஆனந்தகுமார் சோமானி, போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற  உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுதாகர் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார்,  ஜின்னா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டீன்கள் காயம் அடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு அவர்களது காயத்தின் தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை (நாளை) 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

0 comments:

Post a Comment