உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக விளங்கும் துபாயில் கடுமையான வெயிலின் மூலம் வெப்பமும் தாக்கி வருகிறது.
இதனால், அங்கு சாலைகள், பாலைவனம் தவிர மனிதர்கள் கால் வைக்கும் அனைத்து இடங்களும் குளிர்சாதன வசதி கொண்டவையாகவே உள்ளன. காரில் ஏ.சி., பஸ்சில் ஏ.சி., என்று சாலை போக்குவரத்து வாகனங்களிலும் ஏ.சி. இல்லாமல் பயணிக்க முடியாது.
இது மட்டுமின்றி, பஸ்சுக்காக காத்திருக்கும் நிழற்குடைகளும் கூண்டு வடிவில் அமைக்கப்பட்டு, அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகவே உள்ளன.
மரபு சாரா எரிசக்தியின் மூலம் துபாயை பசுமை நகரமாக மாற்ற முயன்று வரும் துபாய் அரசு, பாலைவனப் பிரதேசமான துபாயை சுட்டுப் பொசுக்கும் சூரிய சக்தியை ஆக்கப்பூர்வமான மின் ஆற்றலாக மாற்றும் திட்டத்துக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதில் முதல் கட்டமாக, பஸ்களின் விளக்குகள் மற்றும் உள்பகுதியின் குளிர்சாதன வசதி போன்றவற்றுக்காக சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ள துபாயின் மரபு சாரா எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம், தற்போது அடுத்த கட்ட ஆராய்ச்சியிலும் வெற்றியடைந்துள்ளது.
அல் குபைபா பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்த பயணிகள் காத்திருப்பு கூண்டுக்கு சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கைமேல் பலன் அளித்துள்ளது.
இந்த கூண்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரித்து, அந்த மின்சாரத்தின் மூலம் அந்த கூண்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை மற்றும் குளிர்சாதன இயந்திரத்தை இயக்கும் சோதனை முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில், அல் கவ்னீஜ் பஸ் நிலையத்தையும் சூரிய சக்தியின் மூலம் குளிரூட்டும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக துபாயின் பொது போக்குவரத்து துறை செயல் அதிகாரி யூசுப் அல் அலி தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment