வழிகாட்டி மதிப்பை உயர்த்தியதால் நலிவடைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழிலை மேலும் நசுக்கும்விதமாக பத்திரப்பதிவுத் துறை பொது அதிகாரப் பத்திரங்களுக்கான கட்டணத்தை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், பத்திரங்களை ஸ்கேன் செய்வதற்கு தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2012ல் தமிழகம் முழுவதும் நிலங்கள், வீட்டு மனைகளின் வழிகாட்டி மதிப்பு 10 முதல் 100 சதவீதம் வரை பல இடங்களில் உயர்த்தப்பட்டது. இதனால், ரியல் எஸ்டேட் தொழில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த 2 வருடங்களாக வீழ்ந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நிமிரவே இல்லை.
பழைய மாமல்லபுரம் சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மேலும் அதிரடியாக பொது அதிகாரப் பத்திரத்துக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
தற்போது குடும்ப உறுப்பினர்களுக்குள் வழங்கப்படும் பொது அதிகார ஆவணங்களுக்கு ரூ.100 மதிப்பில் முத்திரைத்தாளும், ரூ.1000 பதிவுக்கட்டணமும் செலுத்தினால் போதுமானது. ஆனால் தற்போது பொது அதிகாரம் எழுதிக் கொடுப்பவர் பல நபர்களாக இருந்தால் ஒவ்வொரு நபருக்கும் முத்திரைத்தாள் கட்டணம் ஒவ்வொரு நூறாகவும், பதிவுக் கட்டணம் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள் ளது.
உதாரணமாக குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் சேர்ந்து ஒருவருக்கு பொது அதிகாரம் எழுதிக் கொடுத்தால் இதுவரை 100 ரூபாய் முத்திரைத்தாளில் 1000 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதுமானதாக இருந்தது. தற்போது 500 ரூபாய் முத்திரைத்தாளில் 5,000 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று குடும்ப உறுப்பினர் அல்லாத நபர்கள் யாரேனும் பொது அதிகாரம் எழுதிக் கொடுத்தால் 100 ரூபாய் முத்திரைத்தாளும், 10 ஆயிரம் ரூபாய் பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 100 ரூபாய் கணக்கில் முத்திரைத்தாள்களும், 10,000 ரூபாய் கணக்கில் பதிவுக்கட்டணமும் செலுத்த வேண்டும். உதாரணமாக ஐந்து பேர் சேர்ந்து ஒருவருக்கு பொது அதிகாரம் எழுதிக் கொடுத்தால் இதுவரை 100 ரூபாய் முத்திரைத்தாளில் 10,000 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதுமானதாக இருந்தது. தற்போது 500 ரூபாய் முத்திரைத்தாளில் 50,000 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த திடீர் முத்திரைத்தாள் கட்டண உயர்வு, பதிவுக்கட்டண உயர்வால் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுமட்டுமின்றி எந்த ஆவணத்தை பதிவு செய்வதாக இருந்தாலும் தற்போது கணினி கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
தற்போது 10 தாள்களுக்கு அதிகமாக எண்ணிக்கை கொண்ட ஆவணங்களாக இருந்தால் ஒவ்வொரு கூடுதல் தாளுக்கும் 15 ரூபாய் ஸ்கேனிங் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக பதிவுக்கு தாக்கல் செய்யும் ஆவணம் 30 தாள்கள் கொண்டதாக இருந்தால் 300 ரூபாய் தனியாக ஸ்கேனிங் கட்டணம் கட்ட வேண்டும்.
இந்த திடீர் கட்டண உயர்வால் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment