
அறுபது வயதை தாண்டி ஒருவர் வாழ்வதே அபூர்வம் என்ற தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டும் 100 வயதை கடந்தும் துடிதுடிப்புடன், இளைஞர்களுக்கு ஒப்பான சுறுசுறுப்புடன் வாழ்ந்து வரும் செய்தி நம்மில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அந்த வாழ்க்கை முறையில் ஒரு மாபெரும் ரகசியமும் பொதிந்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடு என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் பாகிஸ்தானை சுட்டிக் காட்டியுள்ள நிலையில், அத்தகைய மனப்போக்கு கொண்ட மக்களுடன் இவர்கள் எப்படி 60-க்கு பிந்தைய 40க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர்? என்ற கேள்வியும் நமது மனங்களில் நிச்சயமாக உதிக்கவே செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.
பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் சுமார் 200 கிலோ மீட்டர் நீளத்துக்குவற்றாத ஜீவநதி ஓடுகிறது. இந்த நதிக்கரை ஓரமுள்ள மலையோரப் பகுதியின் நீலம் சமவெளியில் பல கிராமங்கள் உள்ளன.
பனி படர்ந்த பெரும் மலைகள், எங்கும்-என்றும் பசுமையாக மரம், செடி, கொடி, புல்வெளி, சுவையான மலையருவிகள், நீர்ச்சுனைகள் என இயற்கை அன்னை எழில் தாண்டவம் புரியும் இப்பகுதியில் இருபத்தொன்றாம் நூற்றாண்டை நெருங்கும் இந்த காலத்திலும் விவசாயப் பணிகளில் இயந்திரங்களின் பயன்பாடு கிடையாது.
காளைகளை பூட்டிய ஏரை நம்பித்தான் இங்கு பயிர் தொழில் செய்கிறார்கள். இங்குள்ள வயல்களில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடும் மிக,மிகக் குறைவு. இப்பகுதியில் சந்தைகளோ, ’ஃபாஸ்ட் ஃபுட்’ கடைகளோ கிடையாது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலைப்பகுதி பனிக்காலமான 6 மாதங்களுக்கு பாகிஸ்தானின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு விடும்.
இப்பகுதியில் வசிக்கும் ஆண்,பெண் இருபாலரும் 100 வயதை கடந்தும் இளமைத் துடிப்புடன், ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொண்டு, கூடுதலாக சில வேலைகளையும் செய்துக் கொண்டு இவர்களால் மட்டும் எப்படி இந்த வயதிலும் சோர்வின்றி துடிதுடிப்புடன் செயலாற்ற முடிகிறது?
இந்த கேள்விகளுக்கு இங்குள்ள கிராமங்களில் ஒன்றில் வசிக்கும் ஹஃபீசுல்லா மிகத் தெளிவாக பதில் கூற்கிறார். தனக்கு 139 வயது ஆகின்றது என்று இவர் கூறினாலும், பாகிஸ்தான் அரசின் மக்கள் தொகை குறிப்பேடுகளில் இவரது வயது 107 என்றே காணப்படுகின்றது.
இன்றும், கண்ணாடி பயன்படுத்தாமல் படிக்கும் அளவுக்கு கூர்மையான பார்வைத் திறன் பெற்றிருக்கும் ஹஃபீசுல்லா, கையில் ஒரு சிறிய தடியுடன் தனது வயலுக்கு சென்று தினமும் பார்வையிட தவறுவதில்லை. இந்த ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்புக்கும் உடல் உழைப்பும், உழைப்புக்கேற்ற உணவு பழக்கமும் ஒரு முக்கிய காரணம் என்கிறார், இவர்.
இறைச்சி வகைகளை அதிகமாக உண்ணாமல், பசுமையான பச்சை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதும் தனது ஆயுளின் ரகசியம் என்று குறிப்பிடும் இவர், அதிகமான விளைச்சல் காலத்தில் காய்கறிகளை பறித்து, அவற்றை குளிர் உறைந்த அப்பகுதி பூமியில் புதைத்து வைத்து, தேவைப்படும்போது, காய்கறிகளை பூமியில் இருந்து தோண்டி எடுத்து நாங்கள் பயன்படுத்துகிறோம் என்றும் இவர் கூறுகிறார்.
இவரோடு குடும்பம் நடத்திய 3 மனைவிகள் இறந்து விட்டனர். நான்காவதாக 70 வயது மனைவி இஸெம் ஜானுடன் வாழ்ந்து வருகிறார்.
‘இவருக்கு தேவையான என்னால் முடிந்த அத்தனை சேவைகளையும் நான் செய்து வருகிறேன். இதற்கான நற்கதியையும், பரிசையும் ஆண்டவன் எனக்கு அளிப்பான் என்று நம்புகிறேன்’ என்று ஹஃபீசுல்லாவின் காலை மெல்ல அமுக்கி விட்டபடி அடக்கத்தோடு கூறுகிறார், இஸெம் ஜான்.
இங்கு வசிக்கும் அனைவரும் அன்றாடம் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, விவசாயம், தோட்ட வேலை, மரம் வெட்டுதல், ஆடு,மாடு,கோழி மேய்த்தல், தச்சு வேலை உள்ளிட்ட பல வேலைகளை மாலையின் இருள் கவிழும் வேளை வரை செய்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானில் வாழும் ஆண்களின் சராசரி ஆயுள் காலம் 64 எனவும், பெண்களின் சராசரி ஆயுள் காலம் 66 எனவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் ஆயுள் காலம் மட்டும் 100 ஆண்டுகளை கடந்து நீட்டிக்கப்பட்டு வருவதற்கு என்ன காரணம்?
பல்வேறு மூலிகைகள் வளரும் மலைக்காட்டு பகுதியில் பாய்ந்து வரும் அருவி நீரை குடிப்பது, கலப்படமில்லாத இயற்கை உணவு, மாசு கலவாத சுத்தமான காற்றை சுவாசித்தல், இத்தனைக்கும் மேலாக கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலைப்பகுதி அமைந்துள்ளதால் இங்கு நிலவும் சீதோஷ்ன நிலை மனித ரத்தத்தின் சிகப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதும்தான் இங்குள்ள மக்களின் நீடித்த ஆயுளுக்கும், துடிதுடிப்பான வாழ்க்கை முறைக்குமான காரணம் மட்டுமல்ல.., ரகசியமும் கூட என்றே கருத தோன்றுகிறது.
0 comments:
Post a Comment