எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்க நினைப்பவர்கள் வீட்டுமனைகளையே தேர்வு செய்கிறார்கள். புறநகர் பகுதியில் தான் வீட்டு மனைகள் வாங்க முடியும் என்பது நிதர்சனமாகிவிட்ட நிலையில் அதை குறைந்த விலையில் வாங்குவதற்கு விருப்பப்படுகிறார்கள். நகர்ப்பகுதியில் வீட்டுமனைகளை பார்ப்பது அரிதாகி இருப்பது ஒருபுறமிருக்க அதற்கான விலையும் அதிகமாக இருப்பது புறநகரைநோக்கி நகர செய்கிறது.
ஏனெனில் புறநகர் பகுதியில் குறைந்த விலையில் சதுர அடி அதிகமாக உள்ள இடத்தை வாங்கிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படி சதுரஅடி கூடுதலாக அமைவது முதலீட்டுக்கு ஆதாயம் தருவதாக அமையும் என்று கருதுகிறார்கள். எதிர்காலத்தில் வீட்டுமனையின் விலை அதிகரிக்கும்போது வாங்கி இருக்கும் சதுர அடிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும் என்ற மனோபாவம் அதிகரித்து வருகிறது. அதனால் முதலீடு நோக்கத்திற்காக மனை வாங்குபவர்கள் புறநகர்பகுதிக்கு அப்பால் இருக்கும் கிராமப்பகுதிகளில் வீட்டுமனைகளை வாங்க நினைக்கிறார்கள். குறைந்த விலையில் அதிக சதுர அடி கொண்ட இடத்தை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் அதற்கு காரணமாக இருக்கிறது. அப்படி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை பார்ப்போம்.
* குறைந்த விலையில் கிடைக் கிறது என்பதற்காக அவசரப்பட்டு வீட்டுமனைகளை வாங்கிவிடக்கூடாது. விலை குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பது பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
* முக்கியமாக அந்த வீட்டு மனைக்கு ‘அங்கீகாரம்’ பெறப்பட்டு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். சிலர் அங்கீகாரம் பெறாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முற்படுவார்கள். அப்படிப்பட்ட இடத்தை வாங்குவது பிரச்சினையையே உருவாக்கும்.
* சிலர் வீட்டுமனைக்கு ‘அப்ரூவல்’ விரைவாக கிடைத்து விடும். இப்போது வாங்கினால் விலை குறைவாக இருக்கும். ‘அப்ரூவல் கிடைத்தபிறகு வாங்குவதாக இருந்தால் விலை அதிகரித்துவிடும் என்று ஆசைவார்த்தை காட்டுவார்கள். அதை நம்பி விலை குறைவுக்கு ஆசைப்பட்டு அப்ரூவல் இல்லாத இடத்தை வாங்குவதற்கு முயற்சிக்க கூடாது. வீட்டுமனை சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். முறையான ஆவணங்கள் அனைத்தும் இருக்கிறதா? என்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தாய் பத்திரத்தின் ஒரிஜினலை வாங்கி பார்த்து உறுதி செய்து கொள்வது நல்லது.
* வீட்டுமனை பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு ‘லே–அவுட்’ மூலம் விற்பனை செய்யப்படுவதாக இருந்தால் அந்த இடத்தில் சாலை, பூங்கா, விளையாட்டு திடல், சமூக கூடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக வெகு தொலைவில் இருக்கும் இடத்தை தேர்வு செய்யக் கூடாது. அந்த இடத்தின் பிற்கால வளர்ச்சியை கவனத்தில் கொள்வதோடு கடந்த சில வருடங்களில் அந்த பகுதி வளர்ச்சி அடைந்து இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
* முதலீடு நோக்கத்திற்காகத்தானே வாங்குகிறோம் என்று வளர்ச்சி அடையாத பகுதியில் வீட்டுமனையை தேர்வு செய்வது எதிர்பார்க்கும் லாபத்துக்கு தடையாக மாறும்.
* அடிக்கடி மனையை சென்று பார்வையிடுவதோடு நின்று விடக்கூடாது. அந்த பகுதியில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
* மனையை வாங்கிப்போட்டுவிட்ட நிம்மதியில் அதை பார்க்காமல் நீண்டகாலம் இருந்துவிட்டால் அது ஆக்கிரமிப்புக்கு ஆளாகக்கூடும். மனை நமது பெயரில் இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பை அகற்றுவது பிரச்சினையாக மாறக்கூடும். நீண்டகாலம் அங்கு வசித்து வந்தால் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு நீதிமன்றத்தை நாடவேண்டி இருக்கும்.
* நீண்டநாட்கள் பராமரிப்பில்லாமல் இருக்கும் இடத்தை சிலர் போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்வதற்கு முயற்சிக்கவும் செய்யலாம். அதனால் இடம் உங்கள் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருப்பதை அவ்வப்போது அந்த பகுதிக்கு சென்று உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முதலீட்டு நோக்கத்தில் சொத்து வாங்கியதை விற்பனை செய்வதில் சிக்கலை சந்திக்க நேரிடும்.
* வாங்கும் சொத்துக்கு உங்கள் பெயரில் பட்டா வாங்கிக்கொள்வதும் அவசியம். அதனால் இடம் வாங்கும்போது விற்பவர் பெயரில் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் உங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு எளிதாக இருக்கும். அவர் பெயரில் பட்டா இல்லாவிட்டால் உடனடியாக உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
* இடத்தை அடிக்கடி சென்று பார்வையிடுவதோடும் நிறுத்திவிடக்கூடாது. சில ஆண்டு இடைவெளியில் வில்லங்க சான்றிதழ் வாங்கி உங்களுக்கு தெரியாமல் வேறு ஏதேனும் பரிவர்த்தனை நடந்து இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இணையதளத்தின் வாயிலாகவும் சொத்து விவரங்களை அவ்வப்போது சரிபார்த்துவர வேண்டும்.
0 comments:
Post a Comment