Tuesday, September 23, 2014

போலி டாக்டர்கள் கைது என்ற செய்தி தமிழக நாளிதழ்களில் அடிக்கடி இடம் பெறும் சாதாரணமான விஷயமாகி விட்டது. மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய அளவிற்கு டாக்டர்கள் ,மருத்துவர்கள் இல்லை என்று ஒரு புறம் சொன்னாலும் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் 280-வது கவுன்சில் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் (தேர்வு) சுரேந்திரன், செயலாளர் ராஜா, பொருளாளர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் ,” தற்போது அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மருத்துவதுறை மீது அதிருப்தியில் உள்ளனர். இதற்கு மருத்துவதுறையில் எங்காவது நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வு காரணமாக உள்ளது. நாங்கள் செய்யும் நல்ல செயல்கள் வெளியே வருவது இல்லை.

சுகாதார துறையில் இன்சூரன்சின் பங்கு பெருகி வருகிறது. அதற்கு இந்திய மருத்துவ சங்கம் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 650 மருத்துவமனைகள் இன்சூரன்சு திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.

 பாரத பிரதமர் மோடி அனைத்து மக்களுக்கும் இன்சூரன்சு திட்டம் கிடைக்கும் வகையில் திட்டம் தயார் செய்து வருகிறோம் என அறிவித்து உள்ளார். அதற்கான தொகையை நிர்ணயம் செய்யும் போது, இந்திய மருத்துவ சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும். மருத்துவமனை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை விரைவில் கொண்டு வரவேண்டும்.

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் மாவட்டத்திற்கு ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை உள்ளனர். இவர்கள் வாங்கும் கட்டணம் குறைவாக இருக்கலாம். ஆனால் விளைவு ஆபத்தானது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட்டும், 2,000-க்கும் அதிகமான போலி டாக்டர்களை, போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள், நீதிமன்றத்தில், 500, 1,000 ரூபாய், அபராதம் கட்டி விட்டு, மீண்டும்,அதே வெள்ளைக் கோட்டை மாடியபடி மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். இவர்கள் வாங்கும் கட்டணம் குறைவாக இருக்கலாம். ஆனால் விளைவு ஆபத்தானது. எனவே, அரசு இவர்களை ஒழிக்க வேண்டும். மருத்துவமனை ஒழுங்குபடுத்தும் சட்டம் போலி டாக்டர்களை ஒழிக்க உதவும் என நம்புகிறோம்.” என்றார்

0 comments:

Post a Comment