Thursday, September 25, 2014

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2014-15 நிதி ஆண்டிற்கான மின் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரூ.6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான மின் உற்பத்தி இன்றி, மின்வெட்டு மூலம் பாதிப்புக்கு ஆளாகிவரும் ஏழை, எளிய மக்களை வாட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த பொது அறிவிப்பையடுத்து, கண்துடைப்பு கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு வரும் அக்டோபர் 23 க்கு பின்னர் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அமலுக்கு வரும் என தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட அதிகப்படியான மின் கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்களும், குடிசை மற்றும் சிறு தொழில்புரிவோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 6,800 கோடி அளவிலான மின் கட்டண உயர்வு மேலும் அவர்களை பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்த அறிவிப்பின் படி, வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு 40-85 காசு வரையிலும், குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 50-60 காசுகள் வரையிலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதிய மின் உற்பத்தி திட்டங்கள் அமைக்காததால், ஏற்படும் மின் பற்றாக் குறையை சமாளிக்க மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உற்பத்தி குறைந்து சிறிய தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த கூடுதல் கட்டணம் அவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்குவதோடு அவர்களின் தொழிலை மேலும் நலிவடையச் செய்துவிடும்.
இந்த கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தாலும், அது 500 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும்.

எனவே, தமிழக ஏழை எளிய மக்கள், சிறு தொழில் புரிவோரின் நலனை கருத்தில்கொண்டு, மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்த கட்டண உயர்வு முழுவதையும் மானியமாக அறிவித்து அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் போதுமான மின் உற்பத்தித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment