Wednesday, September 24, 2014

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் எந்த அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்பது பற்றி 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சமூக நீதியைப் பின்பற்றுவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலம் தமிழகமாகும். இதை சீர்குலைக்க ஆதிக்க சக்திகள் அவ்வப்போது சட்டப்போர் நடத்தி வருகிறார்கள்.

இதை உரிய சட்ட வல்லுனர்களைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கவனமாகவும், முனைப்புடனும் வாதாட வேண்டும்.
தமிழகத்தில் இடஒதுக்கீடு தேவைப்படும் மக்களின் அளவு 69 சதவீதத்தை விட அதிகமாக இருக்கிறது. இதை உச்சநீதிமன்றத்திற்கு உணர்த்த வேண்டுமெனில், சாதி வாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. இதன்மூலம் அனைவருக்கும் உண்மையான சமூக நீதி கிடைக்க வழி பிறக்கும்.

மேலும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வகையில் அந்தந்த மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.

இவ்விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், சமூக நீதி அமைப்புகளும் ஓரணியில் செயலாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவண் -
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்

0 comments:

Post a Comment