Wednesday, September 24, 2014

தஞ்சை கீழவாசல் சின்னையாபிள்ளை தெருவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சிராஜூதீன் நகரில் உள்ள ஒருவர்  வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். அந்த பெண் வாய் பேச முடியாதவர் ஆவார்.  வீட்டின் உரிமையாளர் தஞ்சையில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த  நிலையில் துணிக்கடை உரிமையாளர் அந்த பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அவர் 8 மாத கர்ப்பம் அடைந்தார். அந்த பெண்ணை தஞ்சையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு  அழைத்துச்சென்று குழந்தையை சிசுவிலேயே அகற்றி உள்ளார்.

இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள், தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்  கொடுப்பதற்காக சென்றனர். அப்போது அந்த பெண்ணின் தங்கை கணவர் அங்கு வந்து, புகார் எதுவும் கொடுக்க வேண்டாம். இது தொடர்பாக பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி அந்த  பெண்ணை  மட்டும்  ஆட்டோவில்  அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஒரத்தநாட்டிற்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை அங்கு வைத்து மேலும் 4 பேர் பாலியல் பலாத்காரம்  செய்ததாக  கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்ததும் பெண்ணின் உறவினர்கள் சுமார் 25–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தஞ்சை காமராஜர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர்  அவர்கள் கூறுகையில், ‘‘துணிக்கடை உரிமையாளர் பாலியல் கொடுமை செய்ததில் பெண் கர்ப்பமானார்.  இதனால்  தனக்கு  அவமானம்  ஏற்படும் என்பதால் கடை உரிமையாளர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து புதைத்து விட்டார்.

இது குறித்து கடை உரிமையாளரிடம் தட்டிக்கேட்டோம். மேலும் பாலியல் குற்றம் செய்தது தொடர்பாக  மருத்துவ  பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். இந்த நிலையில் அந்தபெண்ணை ஒரத்தநாட்டிற்கு அழைத்துச்சென்று மேலும் 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடை உரிமையாளர் செய்த குற்றத்தை மறைக்க இந்த கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக  கருதுகிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், கிழக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களுடன்  சமாதான  பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவினர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்திற்கு  சென்று  நடந்த  சம்பவம்  குறித்து புகார் அளித்தனர்.
செய்தி. தினத்தந்தி.

0 comments:

Post a Comment