Friday, December 12, 2014

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் கணக்கு எண்களை லாவகமாக பெற்று, பணத்தை சுருட்டும் கும்பல் ஒன்று சுற்றி வருகிறது.ஓசூர், லேக்வியூ அவென்யூவை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 44; பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வழங்கும், ‘கிரெடிட் கார்டு’ பெற்றிருந்தார். நேற்று அவரின் அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு நபர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் கார்டு கிரெடிட் லிமிட் உயர்த்துவதற்காக பேசுவதாகவும் கூறினார்.

கிரெடிட் கார்டு எண்ணை பெற்றுக் கொண்டார். மேலும், வங்கி உயர் அதிகாரிகள் பேசுவதாகவும் கூறி, பலரை பேச வைத்தார். அனைவரும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசினர். பின், அந்த கிரெடிட் கார்டு எண்ணை வைத்து, ஆன் – லைன் மூலம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றுள்ளனர்.

அடுத்த நிமிடம், கோவிந்தராஜன் அலைபேசிக்கு, 10 ஆயிரம் ரூபாய், ‘டெபிட்’ ஆனதற்கான குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜன், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட
வங்கியில் விசாரித்தபோது, அந்த வங்கியில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிந்தது.உடனடியாக அலைபேசியில் வந்த எண்ணை அழைத்தபோது, மும்பையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து, பின், தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மறுபடி, சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்தபோது, இந்த மோசடிக்கு வங்கி பொறுப்பேற்காது எனவும், இதுபோன்று, 50க்கும் மேற்பட்ட புகார்கள், ஓசூர் சுற்று வட்டார பகுதியில் எழுந்துள்ளதாகவும் வங்கி நிர்வாகத்தினர் கூறினர்.

மேலும், இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்யுமாறும் கூறினர்.எனவே, ‘கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், கார்டு எண்களை அலைபேசியில் வங்கி அதிகாரிகள் பெயரில் கேட்டாலும், யாரிடமும் கூற வேண்டாம்’ என, வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

0 comments:

Post a Comment