Friday, December 12, 2014

வாஷிங்டன்: உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றும், காதலின் சின்னமான தாஜ்மஹால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.

இந்த மாளிகை முழுவதும் மார்பிள் எனப்படும் தூய வெள்ளை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. 1600-ம் ஆண்டுகளில் மொகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய இந்த மாளிகையின் மேல்புறம் 115 அடி உயர பளிங்கு கற்களால் ஆன கூம்பு உள்ளது.

அதுமட்டுமின்றி 130 அடி உயர ஸ்தூபிகளும் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு யுனெஸ்கோ தாஜ்மஹாலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. 1970-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாஜ்மஹாலின் தூய வெண் நிறம் பழுப்பாக மாறுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இதனால் தாஜ்மஹாலை தூய்மைபடுத்துவது, மாளிகையின் மீது படிந்திருக்கும் தூசி மற்றும் மண்ணை அகற்றுவது, வெள்ளை நிற களிமண் பூசுவது மற்றும் அகற்றுவது ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து பளிங்கு கற்களை பாதுகாத்து வந்தனர்.
காற்றில் உள்ள மாசு தான் இந்த நிறம் மாறுவதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இதற்கு உரிய ஆய்வுகள் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கான்பூர் ஐ.ஐ.டி., இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், விஸ்கான்சின் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தாஜ்மகால் நிறம் மாறுவதற்கான காரணம் என்ன? என்ற ஆய்வை மேற்கொண்டன.

இதற்காக இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு குழுவினர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பரில் இருந்து 2012 ஜூன் வரை தாஜ்மஹால் வளாகத்தில் காற்று வடிகட்டும் கருவிகள் வைத்து மாதிரிகளை சேகரித்தனர்.

அந்த கருவிகளில் சேகரிக்கப்பட்டவற்றை ஆய்வு செய்ததில் 2.5 மைக்ரானுக்கும் சிறிதாக உள்ள கரித்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே தாஜ்மஹாலின் நிறம் பழுப்பானதற்கு காரணம் என்றும் கண்டறிந்தனர்.

அதேபோல சில சிறிய மாதிரி பளிங்கு கற்கள் தாஜ்மகாலின் பெரிய கூம்பின் மீது பல இடங்களில் பொருத்தப்பட்டது. இரு மாதங்களுக்கு பின்னர் அந்த மாதிரி பளிங்கு கற்களை எடுத்து மின்னணு மைக்ராஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர், அந்த மாதிரி கற்கள் மீது என்னென்ன படிந்துள்ளது, எந்த அளவுக்கு படிந்துள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.

இந்த இரண்டு வகையான ஆய்வுகள் மூலமே மாசு ஏற்படுத்துவது அந்த குறிப்பிட்ட கரித்துகள்கள் தான் என்ற முடிவுக்கு வந்ததாக ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழக புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியரான மைக்கேல் பெர்ஜின் கூறியுள்ளார்.

இந்த கரித்துகள்கள் இயற்கை எரிபொருட்களில் இருந்தும், சமையல் மற்றும் செங்கல் சூளைகள், குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை எரித்தல், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை போன்ற பலவிதங்களில் உருவாகிறது.

இது சுற்று வட்டார விவசாய நடவடிக்கைகளில் இருந்தும், வாகன போக்குவரத்தில் இருந்தும் அல்லது தொலைதூரங்களில் இருந்தும் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்

0 comments:

Post a Comment