Friday, February 21, 2014


சென்னை : நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் தன்னை திட்டமிட்டே சுட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரி தெரிவித்தான்.
 
சென்னை வெட்டுவாங்கேணியை சேர்ந்த சிறுவன் தமீம் அன்சாரி (14) அப்பகுதியில் கோயில் உண்டியல் திருட்டு போனது தொடர்பாக கடந்த மாதம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டான். பின்னர் நீலாங்கரை குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியபோது குண்டு பாய்ந்து படுகாயமடைந்தான்.சிகிச்சை பெற்று திரும்பிய சிறுவன் தமீம் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:சம்பவம் நடந்த முந்தைய நாள் இரவு நான் கடற்கரையை ஒட்டியுள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த போலீசார் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு என்னை இரண்டு டேபிளுக்கு நடுவே கட்டி வைத்து இரும்பு குழாய்களால் அடித்தனர்.

பின்னர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உண்டியல் திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டினர். இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். பிறகு காவல்நிலையத்திற்கு வந்த ஆய்வாளர் புஷ்பராஜ் முதலில் வெறும் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவேன் என என்னை மிரட்டினார்.பின்னர் 2 குண்டுகளை துப்பாக்கியில் போட்டு வாயில் வைத்து என்னை சுட்டார். வேண்டுமென்றே என்னை திட்டமிட்டுதான் சுட்டார்.இவ்வாறு தமீம் அன்சாரி கூறினான்.தமீம் அன்சாரியின் தாய் சபீனார் பேகம் கூறும் போது, என்னுடைய மகனை காவல்துறையினர் சுட்ட பிறகு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் அங்கு அவனுக்கு மருத்துவ உதவிகள் செய்வதை காவல்துறையினர் தடுத்து கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே எந்த வித இடஞ்சலும் இன்றி மருத்துவம் செய்யப்பட்டது. என் மகனை கைது செய்தது குறித்து காவல்துறையினர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அவ்வளவு ஏன் அவனை சுட்ட பிறகு கூட தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் பத்திரிகையாளர்கள் வந்து கூறிய பிறகு தான் விவரம் தெரியும் என்றார். 

தமீம் அன்சாரியின் வழக்கில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் சங்கரசுப்பு கூறும் போது, தூக்கு போடும் போது நொறுங்கும் எலும்புகளை குறிவைத்து ஆய்வாளர் சுட்டுள்ளார். எனவே காவல்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் இச்செயல் கவன குறைவால் நடந்ததல்ல. எனவே காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் மீது கொலை முயற்சி பிரிவான 307ல் கைது செய்து சிறையிலிடைத்து சாதாரண நபர்களை விசாரிப்பதைபோல் விசாரிக்க வேண்டும். தமிழக அரசு வழங்கியுள்ள ரூ.1 லட்சம் உதவி தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். தாசில் தார் தலைமையில் நடந்துவரும் விசாரணையை மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும் என்றார்.



vlcsnap-2014-02-21-08h21m51s181

0 comments:

Post a Comment